ஏடிஎம் கொள்ளையை தடுக்க வங்கிகள் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் பாதுகாப்பு முறைகளையும் பலப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஏடிஎம் கொள்ளையை தடுக்க வங்கிகள் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் பாதுகாப்பு முறைகளையும் பலப்படுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 04) வெளியிட்ட அறிக்கை:

"நாடு முழுவதும் அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்காக நகரம் முதல் கிராமங்கள் வரை ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி இருக்கின்றன.

மக்களின் எதிர்பாராத அவசர தேவைகளுக்கு ஏடிஎம் இயந்திரத்ததை பல்லாயிரக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஏடிஎம் இயந்திரங்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகளையும் ஏற்படுத்தியிருந்தாலும் காவலர்கள் இல்லாத சில ஏடிஎம்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபடுகின்றனர். தினசரி நாளிதழ்களில் கொள்ளை முயற்சி பற்றிய செய்தி, நாள்தோறும் வந்தவாறு இருக்கின்றது.

ஏடிஎம் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்த போதிலும் அவற்றை மறைத்தும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஏடிஎம்மில் கொள்ளையடித்தால் அது நடக்காது என்று எண்ணுகிற அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொதுமக்களும் வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுப்படுத்த வேண்டும். பிடிப்பட்டவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்திருட்டில் ஈடுபட இருப்பவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும். மீண்டும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடாதவாறு தடுக்கப்பட வேண்டும்.

வங்கிகள் காவல்துறையை மட்டுமே நம்பி இருக்காமல் வங்கிகளும் முறையான காவல் பணியை பலப்படுத்தியும், தொழில்நுட்ப வசதியை அதிகப்படுத்தியும் ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in