

மதுரையிலுள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு (சிஐடி) காவல்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ஆய்வாளரிடம் ரூ.1.23 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது. தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மதுரை புதூர் பகுதியிலுள்ள கற்பகநகரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இங்கு ஆய்வாளராக ஜான் பிரிட்டோ உள்ளிட்ட காவலர்கள் பணி புரிகின்றனர்.
இவர்கள் தீபாவளியையொட்டி மதுரையிலுள்ள ரைஸ்மில் உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் மூலம் லஞ்சப் பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு வந்தன.
இது தொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு காவல்துறை அலுவலகத்தை சோதனை யிட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திட்டமிட்டனர்.
இதன்படி, நேற்றிரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமர குரு, கண்ணன், ரமேஷ் பாபு உட்பட 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது, பணியில் இருந்த ஆய்வாளர் ஜான் பிரிட்டோவை ஆய்வு செய்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 500 கைப்பற்றினர்.
இதற்கு அவர் சரியான முறையில் கணக்கு சொல்ல முடியாத சூழல், பணம் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும், எழுத்தர் அறையை ஆய்வு செய்தபோது, ரிசிஸ்டர் நோட்டுக்கு நடுவில் ரூ.3,000 இருப்பது கண்டறிந்து கைப்பற்றினர்.
இரவு 7 முதல் நள்ளிரவு 1 மணி வரை நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் காட்டமுடியாத மொத்தம் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 500 யை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, எழுத்தர் உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனர். உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு காவல்துறையிடமே லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் பணம் பறிமுதல் செய்த சம்பவம் மதுரை காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.