

உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பு அதிகரித்ததால் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த 25-ம் தேதி பின்னடைவைச் சந்தித்தது.
அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி அன்று முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் நேரில் காவேரி மருத்துவமனைக்குச் சென்று அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
அமைச்சர் துரைக்கண்ணுவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர் பல்வேறு இணைநோய்கள் பாதிப்பில் உள்ளதும், சி.டி.ஸ்கேன் சோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தற்போது அவர் எக்மோ கருவி உதவியுடன் அதிகபட்ச கவனிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு உள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.