

உடல் ஒத்துழைக்காததால் துறை அலுவலகத்திலோ அல்லது அரசின் பிற துறைகளிலோ நிரந்தர அடிப்படையில் பணி மாற்றம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச் சங்கத்தின் தொடக்கம், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, கோரிக்கை மனு அளித்தல் ஆகிய நிகழ்ச்சி திருச்சியில் இன்று (அக். 30) நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நாச்சியப்பன் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
"தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கை, கால், கண் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் சுமார் 400 பேர் பணியாற்றி வருகிறோம். 2003 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தபோது திறம்பட பணியாற்றி வந்த நிலையில், 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வயது முதிர்வு காரணமாக மாற்றுத்திறனுடன் தற்போது மதுபாட்டில் பெட்டிகளைக் கையாள்வது சிரமமாக உள்ளது.
எனவே, டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை டாஸ்மாக் அலுவலத்திலோ அல்லது அரசின் பிற துறைகளிலோ நிரந்தர அடிப்படையில் பணி மாற்றம் செய்ய வேண்டும். டாஸ்மாக் துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவீத இடங்களில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோர், பார்வைக் குறைபாடு உடையோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 இடங்களையும் கை, கால் குறைபாடு உடையவர்களை நியமிக்க வேண்டும்.
டாஸ்மாக் துறையில் பணியாற்றும் உபரிப் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் பணி மாற்றம் வழங்கும்போது அலுவலக உதவியாளர், எழுத்தர் ஆகிய பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் பிற துறைகள் மற்றும் டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதியத்துடன் ரூ.2,500 சிறப்பு ஊதியம் வழங்குவதைப்போல் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலப் பொதுச் செயலாளர் பி.அரியகுமார், செயல் தலைவர் எம்.அன்பழகன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம், துணைத் தலைவர் எஸ்.சாமிநாதன், துணைச் செயலாளர் பி.செல்வராஜ், திருச்சி மாவட்டத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் பேசுகையில், "யாரிடம் கோரிக்கையைக் கேட்க வேண்டுமோ அவர்களிடம் முறையாகக் கேட்டுள்ளீர்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உங்களை நேரில் சந்தித்தனர். ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உங்களை நேரில் சந்திப்பதுடன் இல்லாமல், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் தாயுள்ளம் கொண்டவர்.
இந்தத் தொழிலில் இருந்தவன் நான். இந்தத் தொழிலில் பணியாற்றியவன். இந்தத் தொழில் புரிந்தவன். இதில் என்னென்ன கஷ்ட நஷ்டங்கள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
உங்களிடம் பல்வேறு மனநிலையில் ஆட்கள் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அவர்களிடம் மனம் கோணாமல் பக்குவமாக பேசி, வியாபாரம் செய்து, அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியப் பங்காற்றுகிறவர்கள் நீங்கள்.
எனவே, உங்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வர் மற்றும் துறை அமைச்சரின் பார்வைக்கு நிச்சயம் எடுத்துச் சென்று, சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் நல்ல தீர்வை வழங்குவதற்கு ஆவன செய்ய முயற்சி செய்வேன். அதிமுக அரசு தாயுள்ளத்துடன் உங்கள் கோரிக்கையைக் கண்டிப்பாக நிறைவேற்றித் தரும்" என்றார்.