

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு கிடையாது என திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி புதன்கிழமை ஆரணியில் உள்ள பழம்பெரும் திமுக பிரமுகர் எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க ஆரணிக்கு வந்தார். அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.கே. ஏழுமலையை அவரது இல்லத்தில் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திமுகவில் இருந்து உங்களை நீக்கியிருப்பது பற்றி…?
‘‘திமுகவிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. நான் இப்போதும் திமுகவில்தான் இருக்கிறேன். தற்காலிக நீக்கம் மற்றும் நீக்கம் செய்யும் முன் எனக்கு நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை. எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கலைஞரிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். தலைமையின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். யார் உள்ளே, யார் வெளியே என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.’’
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு உங்கள் ஆதரவு?
‘‘என் ஆதரவு யாருக்கும் கிடையாது.’’
ஆரணி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் உங்கள் ஆதரவு யாருக்கு?
‘‘இதோ பக்கத்தில் உள்ள முருகனுக்கு தான் என் ஆதரவு’.
திமுகவிலிருந்து எம்ஜிஆர், வைகோ உள்ளிட்டவர்கள் வெளியேறி தனியாகக் கட்சி தொடங்கியுள்ளார்கள். அது போல நீங்களும் புதிய கட்சி தொடங்குவீர்களா?
‘‘புதிய கட்சி தொடங்க நான் என்ன எம்ஜிஆரா? கட்சி தொடங்கமாட்டேன். எனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு மாவட்ட வாரியாக வும், சுற்றுப்பயணம் செய்து எனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறேன். அதன் பின்னர் முடிவை அறிவிப்பேன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆரணியில் பழம்பெரும் திமுக பிரமுகரும், எனது ஆதரவாளர் முருகனின் தந்தையுமான எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க வந்துள்ளேன்.’’ இவ்வாறு அவர் கூறினார்.
எம்.கே. ஏழுமலையிடம் நலம் விசாரித்த மு.க.அழகிரி, ‘‘தலைவரைச் சந்தித்தீர்களா?’’ என்று கேட்டார். ‘‘பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். தற்போது காலில் அடிபட்டுள்ள காரணத்தால் எங்கும் செல்ல முடிய வில்லை’’ என்றார். மதிமுக மாவட்டச் செயலாளர் ஆரணி டி. ராஜா, திமுகவைச் சேர்ந்த எம்.கே. சேகர் உள்ளிட்ட சிலர் அழகிரியைச் சந்தித்தனர்.