

தமிழகத்தில் பாஜக தனிநபரை எதிர்த்தே போராடுவதாகவும், யாருடைய உரிமைக்காகவும் போராடவில்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே இன்று (அக். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழக அரசு தொடுத்த வழக்கில், மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும். இதுகுறித்து 3 மாத காலத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசு இதுகுறித்து எந்தக் கொள்கை முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் ஏற்கெனவே நடைமுறையில்உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கோரினாலும் தர முடியாது என்று கூறியுள்ளது.
அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதற்கு முழுப் பொறுப்பு மோடி அரசுதான். ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களே ஆவர். அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு 500 பேருக்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு இவ்வாறு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்குக் காரணம், அவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதுதான். எனவே, மக்கள் மன்றத்தில் இந்துக்களுக்குப் பாதுகாவலர்கள் என்று காட்டிக் கொள்ளும் பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகள் நீதிமன்றத்தில் சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகின்றன.
எனவே, ஓபிசி மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் தங்களுக்கான வாய்ப்புகளைப் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும், 50 சதவீத இடங்களை வழங்குவதற்கு அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.
அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். இது மத்தியிலிருந்து ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் என்று தெரிகிறது. பாஜகவின் மாநிலக் கல்விப் பிரிவு செயலாளர், ஆளுநர் கையொப்பமிட்டால் அதனைக் கடுமையாக எதிர்ப்போம் என்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதால் என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப் போகிறது? யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது? பாஜக எப்போதும் இரட்டை வேடம் போடுகிற கட்சி. மக்களிடம் ஒரு முகத்தையும், நிர்வாகத்தில் ஒரு முகத்தையும் காட்டுகிற கட்சி.
அடிப்படையில் இந்துக்களின் முதல் எதிரியாகவும், ஒரே எதிரியாகவும் இருக்கிற கட்சி பாஜகவும், சங் பரிவார அமைப்புகளும்தான். சமூக நிதியைக் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். இந்தப் போக்கை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடந்து முடிவதற்குள்ளாக மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இதைக் கண்டும் காணாமல் வழக்கம்போல் அமைதி காக்கிற அதிமுக அரசின் போக்கையும் விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது பாஜகவுக்கு உடந்தையாகச் செயல்படுகிற போக்கு என்பதை விட பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக அதிமுக செயல்படுகிறது என்பதை விசிக சுட்டிக்காட்டுகிறது.
பெண்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு தமிழக அரசியலில் கடந்த 3 நாட்களாக பாடுபடுத்திக் கொண்டிருக்கிற பாஜக, சங்பரிவார கும்பல், பெண்களைத் துன்புறுத்திய ஒருவரை மதுரை எய்ம்ஸ் உறுப்பினாக நியமித்திருப்பது வெட்கக்கேடனாது. இதை விசிக கண்டிக்கிறது. அந்த நியமன ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.
காவல்துறையினர் பாஜகவின் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, அவர்களை அநாகரிகமாகப் பேசவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். காவல்துறையின் போக்கு வேதனைக்குரியதாக உள்ளது. காவல்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அல்லது மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பும் நிலையில் உள்ளது. அல்லது அதிமுக அரசே பாஜகவிடம் ஆட்சி, நிர்வாகம், காவல்துறையை ஒப்படைத்துவிட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொதுவாக தனி நபரை மையப்படுத்தி போராட்டம் நடத்தவதற்கு அனுமதி அளிப்பதே ஆச்சரியமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நடத்திய போராட்டங்கள் இந்து மதத்தைப் புண்படுத்திவிட்டார்கள் என்று எனக்கு எதிராக மட்டுமல்ல நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், யாருடைய உரிமைக்காகவும், இட ஒதுக்கீட்டுக்கும், பெண்களின் நலனுக்காகவும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை.
ஹெச்.ராஜா போன்றவர்கள் ட்விட்டர் பக்கத்தில் அநாகரிகமாக விமர்சனங்களை செய்யக் கூடிய அளவுக்கு தமிழகம் அவர்களை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தமிழகத்தை வன்முறைக் காடாக்க முயல்கிறார்கள். மதவெறியாட்டம் நடத்துவதற்கான ஒரு களமாக மாற்றுவதற்கு முயல்கிறார்கள். இதற்கு முழுப் பொறுப்பு அதிமுக அரசுதான்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.