

காளையார்கோயிலுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தனது கட்சியினருடன் கூடுதல் வாகனங்களில் செல்ல முயன்ற போது, மதுரை விரகனூரில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலிலுள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அங்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
காளையார்கோவிலுக்குச் செல்லும் கட்சித் தலைவர்கள் 6 வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதி. இதற்கு முறைப்படி விண்ணப்பித்து, கார்களுக்கான அனுமதி பாஸ்களும் முன்கூட்டியே காவல்துறையினரிடம் பெறவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்லவேண்டும் என, காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் காளையார்கோவிலுக்கு மருது பாண்டியர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தச் சென்றார்.
அவரது வாகனத்தைத் தொடர்ந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றதாகத் தெரிகிறது.
மதுரை விரகனூர் ரிங்ரோடு சந்திப்பை அடைந்த அவர்கள், சிலைமான் வழியாக காளையார்கோவிலுக்குச் செல்ல முயன்றனர். எல்.முருகன் வாகனம் உட்பட அவரைத் தொடர்ந்து வந்த வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
விதிமுறைப்படி 6 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும். ஏற்கெனவே நிர்ணயித்த கருப்பாயூரணி வழித்தடம் வழியாகவே செல்லவேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர்.
இருப்பினும், எல்.முருகன் மற்றும் அவருடன் வந்த பாஜகவினர் கார்களை விட்டு இறங்கி ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸார் அவர்களிடம் சமரசம் பேசினர்.
அதிகாரிகளின் ஆலோசனையின்படி முதலில் 6 வாகனங்கள் மட்டுமே கருப்பாயூரணி வழியாக அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனாலும், எல். முருகனுடன் சென்ற பிற வாகனங்களும் காளையார்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.