

மதுரையில் பாஜக - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினர் சட்டைகள் கிழிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இணைய நிகழ்வில் பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனுநூலில் பெண்களை இழிவு செய்ததாகப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் ஈரோடு மாவட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்வுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு எதிராக பாஜகவினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், மனுநூலை தடை செய்ய வலியுறுத்தியும், திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினரை கண்டித்தும் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டனர்.
இதற்காக மதுரை நகர், புறநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.
அப்போது, பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்த ஜெயம், துணைத் தலைவர் தங்கம் மற்றும் அக்கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் வளாகப் பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் தேர்தல் பூத் ஏஜன்ட் நியமனம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பாஜகவினர் சிலர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, ஆட்சியர் அலுவலக மெயின் கேட் அருகில் திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விரட்டி அடிக்க முயன்றனர். தடுக்க முயன்ற பாஜக நிர்வாகி தங்கம் உள்ளிட்ட ஓரிருவரின் சட்டை கிழிக்கப்பட்டது.
நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போலீஸார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரப்பரப்பு நிலவியது.
மேலும், சம்பவ இடத்திற்கு நகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, துணை ஆணையர் சிவபிரசாத், ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி சமரசம் பேசினர்.
இதனிடையே பாஜகவினர் காரை செருப்பால் தாக்க முயன்றும், பிரதமரின் உருவ பொம்மையை எரித்தும் கோஷமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த மோதலில் பாஜகவினரை சட்டையைக் கிழித்து தாக்கியதில் தங்கம், ஆனந்த ஜெயத்திற்கு சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.