

அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக். 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கரோனா பரிசோதனை செய்வதில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா தொற்றுநோயால் பாதித்தவர்களை அனுமதிப்பதை நிறுத்திவிட்டு, இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அவர்களைச் சேர்ப்பதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை 95 சதவீதத் தளர்வுகளை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 5 சதவீதத் தளர்வுகளில், குறிப்பாக நீச்சல் குளங்கள், அழகுக்கலை நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பேருந்து வசதிகளைப் பொறுத்தவரை பிற மாநிலங்களுக்குச் செல்ல நாம் தயாராக இருந்தாலும், தமிழக அரசு இதுவரை நமக்கு அனுமதி அளிக்கவில்லை. இதற்காகப் புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழகப் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக அரசு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நான் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.
ஜிப்மர் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்த சர்வே அடிப்படையில் புதுச்சேரியில் 25 சதவீத மக்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் 20 சதவீத மக்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்து இருக்கிறோம். ஆகவே, மருத்துவர்களை அழைத்து கரோனா தொற்றின் தாக்கம், மேற்கொண்டு அதிகரிக்குமா? குறையுமா? என மருத்துவருடன் ஆலோசிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அவர்களது ஆலோசனைப்படி, எந்தெந்தத் துறைகளில் சலுகைகள் வழங்க வேண்டும். குறிப்பாக, தளர்வுகள் கொண்டுவரவேண்டும் என்பது தொடர்பாக அவர்களுடன் கலந்து பேசி அதன்பிறகு அறிவிப்பை மாநில அரசு சார்பாக வெளியிடுவோம்.
மீண்டும் இந்தக் கரோனா தொற்று பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், கரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்து சென்றவர்களைக் கண்காணிக்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரி மாநிலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 48 ஆயிரத்து 269 பேர். தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் 88 ஆயிரம் பேர் இருக்கின்றனர். நீட் தேர்வைப் பொறுத்தவரை, 2018-19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்த 94 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வு பெற்றிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படித்த 1,346 மாணவர்கள் தேர்வு பெற்றிருக்கின்றனர். இவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த 16 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், தனியார் கல்லூரிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 243 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இந்த 16 மாணவர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர், மாஹேவைச் சேர்ந்தவர்கள் 11 பேர் ஆவர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அதை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்குவதற்கான ஒப்புதலை துணைநிலை ஆளுநரிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஆளுநர் மறுத்தால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியிருப்பது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்குச் செய்கின்ற அநீதி.
நீட் தேர்வின் முடிவுகள் வந்து மாணவர் சேர்க்கை தொடங்குகின்ற நேரத்தில், புதுச்சேரியில் 27 சதவீதமும், தமிழகத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை வழங்கினால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். ஆனால், அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மத்தியிலுள்ள நரேந்திர மோடி அரசும், இந்திய மருத்துவக் கழகமும் செயல்பட்டு வருகிறது.
இதை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக நீதி என்று சொன்னால் அனைத்து சமுதாயத்துக்கும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும். ஆகவே, உடனடியாக பிரதமர் இதில் தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு புதுச்சேரி மாநிலத்தில் 27 சதவீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். இது சம்பந்தமாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறேன்.
நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட உள்ளது. நாட்டு மக்கள் தங்களுடைய கருத்துகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியவில்லை. அரசியல் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளைப் பரிமாறினால், அவர்களைத் தேசவிரோதிகள் என்று மத்தியில் உள்ள பாஜக ஆட்சி விமர்சனம் செய்கிறது.
இப்படி இந்த நாட்டில் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவைப் பயன்படுத்துவது, அவர்கள் போதை மருந்து வைத்து இருக்கிறார்கள் என்று பொய்யான வழக்குத் தொடர்வது, இப்படி எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற சூழலை நம் நாட்டில் பார்க்க முடிகிறது.
மாநில அரசும் எந்த முடிவும் சுதந்திரமாக எடுக்க முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக மத்திய அரசு எல்லா நிலைகளிலும் இருந்து ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறது. மாநில அரசு ஒரு வழக்கை விசாரணை செய்து கொண்டிருக்கிறது என்றாலும், மத்திய அரசு அந்த வழக்கை மாநில அரசின் அனுமதியின்றி நேரடியாக சிபிஐக்கு மாற்றுகிறது. இப்படித் தொடர்ந்து தங்களுக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றுவது, எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெரிப்பது என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது பாஜகவுக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. இது பல காலம் நீடிக்காது. இந்தியாவினுடைய ஜனநாயகத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது.
குறுகிய காலத்தில் வேண்டுமென்றால் இந்த மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அவர்கள் தொல்லை கொடுக்கலாம். ஆனால், அடிப்படை ஆதாரமாக இருக்கின்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் அசைத்துப் பார்த்துவிட முடியாது. சர்வாதிகாரப் போக்கு பல ஆண்டுகள் நீடிக்காது. இந்த நாட்டு மக்கள் எல்லாவற்றிற்கும் ஒருநாள் முடிவு கட்டுவார்கள்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.