

தூத்துக்குடியில் தனது சலூன் கடையையே குட்டி நூலகமாக மாற்றியிருக்கும் முடித்திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பனுடன் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் உரையாடி பாராட்டினார்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்.மாரியப்பன் (39). முடிதிருத்தும் தொழிலாளியான இவர், அந்த பகுதியில் 'சுஷில் குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வருகிறார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் மாரியப்பனுக்கு சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது.
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது பயனுள்ள தகவல்களை படிக்கட்டுமே என்ற நோக்கத்தில் தான் புத்தகங்களை முதலில் சலூன் கடையில் வாங்கி வைத்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு இந்த சலூன் கடையை தொடங்கிய போது சிறிய அலமாரியில் 20 புத்தகங்களை வைத்திருந்தார். நாளடைவில் அது குட்டி நூலகமாகவே மாறிவிட்டது. இப்போது பொன்.மாரியப்பனின் சலூன் கடையில் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. இதில் வரலாறு, காவியம், சிறுகதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் போன்றவை அதிகம் உள்ளன.
இதுமட்டுமல்லாமல் புத்தகங்களை படிப்போருக்கு முடிதிருத்தும் கட்டணத்தில் சலூகைகளையும் அளித்து இளைஞர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தினார் மாரியப்பன். மாரியப்பனின் இந்த சேவை குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த டிசம்பர் 10-ம் தேதி விரிவான கட்டுரை வெளியானது.
இதனை பார்த்து பலரும் மாரியப்பனுக்கு புத்தகங்களை வாரி வழங்கி உதவினர். குறிப்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, பொன்.மாரியப்பனின் சலூன் கடைக்கே சென்று அவரை பாராட்டியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய சுமார் 50 புத்தகங்களை வழங்கினார்.
பொன்.மாரியப்பனின் சேவை பிரதமர் நரேந்திர மோடி வரை எட்டியது.
இதையடுத்து நேற்று வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி முடித்திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தமிழில் உரையாடி பாராட்டினார். இந்த உரையாடல் வானொலியில் நாடு முழுவதும் ஒலிபரப்பானது.
''மாரியப்பன் எப்படி இருக்கீங்க எனத் தொடங்கிய பிரதமர் மோடி, சலூன் கடையில் நூலகம் வைக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு தோன்றியது என வினவினார். இதற்கு பதிலளித்த மாரியப்பன், நான் 8-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். குடும்ப சூழ்நிலையால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. சிறிய வயதிலேயே புத்தகங்களை அதிகம் படிப்பேன். எனது கடைக்கு வரும் இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூலகத்தை தொடங்கினேன் என்றார் மாரியப்பன்.
தொடர்ந்து பேசிய பிரதமர், உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என கேட்கிறார். இதற்கு மாரியப்பன் திருக்குறள் என்கிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சி, வாழ்த்துகள்'' எனக்கூறி பிரதமர் தனது உரையாடலை நிறைவு செய்தார்.
பிரதமர் தன்னிடம் பேசியதால், அதுவும் தமிழிலேயே பேசியதால் மாரியப்பன் நெகிழ்ச்சியில் உரைந்து போயிருக்கிறார்.
இது குறித்து மாரியப்பன் கூறும்போது, "கடந்த 4 நாட்களுக்கு முன்பு அகில இந்திய வானொலி நிலையத்தில் இருந்து வந்து அழைத்து சென்றனர். எதற்காக அழைத்து செல்கின்றனர் என்பதை என்னிடம் கூறவில்லை. ஏதோ புத்தகங்கள் தருவார்கள் போலும் என நான் நினைத்து கொண்டேன். அங்கு சென்ற பிறகு தான் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் உங்களிடம் பேசப் போகிறார் என்று கூறினார்கள். என்னால் நம்பவே முடியவில்லை.
பிரதமர் என்னிடம் போனில் பேசியதை அங்குள்ள ஸ்டூடியோவில் பதிவு செய்தார்கள். அந்த நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
நாட்டின் கடைகோடியில் வாழும் சாதாரண முடிதிருத்தும் தொழிலாளியான என்னிடம் நாட்டின் பிரதமரே நேரடியாக தொடர்பு கொண்டு, அதுவும் என் தாய்மொழியில் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
பிரதமர் என்னிடம் பேசியதை அறிந்து பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நூல்கள் மனிதனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்த நூல்கள் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றார் பொன்.மாரியப்பன்.