

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவித உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என, அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.
தமிழக முதல்வரின் மதுரை வருகை குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பங்கேற்றார்.
கூட்டத்தில் 29-ம் தேதி தூத்துக்குடியில் கரோனா தடுப்புப் பணி நடவடிக்கை ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு, மக்களுக்கு ஆறுதல் கூறவும், அக்., 30ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் பங்கேற்கவும் மதுரை வருகை தரும் தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக முதல்வர், துணை முதல் வருக்கு நன்றி தெரிவித்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என, நடிகர் கமல் கூறுகிறார். அவர் காணொலி முலம் அறிக்கை விடுவதைத் தவிர்த்து, களத்தில் வந்து பார்க்கவேண்டும். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் சிறப்பாக தூர்வாரப்பட்டுள்ளன. எதிரிகள் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல, வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது குறை சொல்ல முயற்சிக்கின்றனர்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் எனக் காத்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். அதிமுக அரசு மீது மாணவர்களிடம் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
கூடுதல் டிஜிபி நியமனம் நிர்வாக வசதிக்கென எடுத்த முடிவு. அதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
வாரிசு என்ற அடையாள அட்டையைக் கொண்டு அதிமுகவில் பதவி தருவது கிடையாது. அதிகமான இளைஞர்களை சட்டப் பேரவையில் கொண்டது அதிமுக மட்டுமே. இளைஞர்களுக்கு அட்சயப்பாத்திரம் போல் அள்ளி, அள்ளி வாய்ப்புகளை தரும் ஒரே இயக்கம் அதிமுக. உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம் தான். அவர்கள் தலைமையிடம் முறையிட முடியும். கொடுக்கும் இடத்தில் இருக்கும் தலைமை கருணையோடு பரிசீலிக்கும். எங்க ளிடம் கருத்து வேறுபாடு இல்லை. கருத்துப் பரிமாற்றம் மட்டுமே உள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறகும் எஃகு கோட்டையாகவே திகழ்கிறது.
நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பது அவரது உரிமை. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல. பத்தாண்டாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு திமுகவினர் உள்ளனர். திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.