Last Updated : 26 Oct, 2020 01:45 PM

 

Published : 26 Oct 2020 01:45 PM
Last Updated : 26 Oct 2020 01:45 PM

பிள்ளைகளைக் காண 1,400 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை தம்பதியர்

மும்பையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் 1,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு தம்பதியர் வந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.செல்வம் (41). இவரது மனைவி சங்கீதா (36). இவர்கள் மும்பையில் தங்கி பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து மகள் மற்றுன் மகனை கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள சங்கீதாவின் பெற்றோர் வீட்டில் விட்டிருந்தனர்.

கரோனா ஊரடங்கினால் மகன், மகளைப் பார்க்க முடியாமல் மும்பையில் தங்கி இருந்த செல்வம், சங்கீதா ஆகியோர் தவித்து வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அளித்துள்ளபோதிலும் மும்பையில் இருந்து பேருந்து, ரயில் சேவை இல்லாததால் கறம்பக்குடி வந்து தங்களது பிள்ளைகளைப் பெற்றோரால் அழைத்துச் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், அவர்களுடைய மகனுக்கு வரும் 28-ம் தேதி பிறந்த நாள் வருகிறது. இதுவரை மகனின் பிறந்த நாளைக் குடும்பத்தோடு கொண்டாடிய பெற்றோர், இந்த ஆண்டு கொண்டாட முடியாமல்போய் விடுமோ என வருத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இருவரும் மும்பையில் 20-ம் தேதி நள்ளிரவில் புறப்பட்டு 23-ம் தேதி கறம்பக்குடி வந்தனர். 1,400 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து வந்த பெற்றோரை 7 மாதங்களாகக் காணாதிருந்த பிள்ளைகள் கட்டித் தழுவி வரவேற்றனர்.

இதுகுறித்து செல்வம் கூறியபோது, "பிள்ளைகளைக் கொண்டு வந்து விடும்போது ரயிலில் வந்தோம். தற்போது, ரயில் வசதி இல்லாததால் விமானத்தில் வரும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. ஆகையால், இருசக்கர வாகனத்தில் 37 மணி நேரம் வண்டி ஓட்டி வந்துள்ளோம். வண்டி ஓட்டும்போது மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எனினும், பிள்ளைகளைவிட அந்த சிரமம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கரோனா பரிசோதனை செய்த பின்னரே இங்கு வந்தோம். 2 நாட்கள் இங்குள்ளவர்களோடு சேராமலே தனித்திருந்தோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x