

பட்டாசு ஆலை நிர்வாகம், விபத்து ஏற்படாதவாறு பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (அக். 24) வெளியிட்ட அறிக்கை:
"மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு 5 பெண்கள் இறந்துள்ளனர். அதோடு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்ததை அளிக்கிறது.
பட்டாசு ஆலையில் பாதுகாப்புடன் செயல்பட்டாலும் சில நேரங்களில் இதுபோன்ற விபத்துகள் நடந்துவிடுகிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து இந்த தொழிலுக்கு வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு இறக்கும் நிகழ்ச்சி மிகுத்த வருத்ததை ஏற்படுத்துகிறது. வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாதவாறு ஆலை நிர்வாகம் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். அரசும் அடிக்கடி முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரழந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு காயமுற்று சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். தமிழக அரசு உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்ததை வழங்க வேண்டும். காயமுற்று சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தரும்படி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.