

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் மழை பெய்துவரும் காரணத்தால், தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
அதன்படி, ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து இன்று (அக். 23) காலை 880 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 39.36 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையின் பாதுகாப்பின் கருதி 880 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் வெளியேறும் தண்ணீர் கொலுசுமடுவு, எண்ணேகோல்புதூர் தடுப்பணைகள் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது.
கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து இன்று காலை 779 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 49.10 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் இருந்து 257 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணகிரி அணையில் 49 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள குறிப்பிடதக்கது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், எந்நேரமும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "அணையின் மொத்த உயரமான 52 அடியில் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடி ஆகும். இந்நிலையில், கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை நிலவரப்படி 779 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 49.10 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் உயர்ந்தால், அணையின் பாதுகாப்பு கருதி, மேற்கொண்டு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளது.
அதன்படி, தற்போது அணையில் இருந்து 257 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணையாற்றின் கீழ் உள்ள ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே, ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.