

மதுரை நகரில் போலீஸ் போன்று நடித்து பெண்களை குறிவைத்து நகை பறிப்பு அதிகரிப்பால் பெண்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.
மதுரை நகர் காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிரேமானந்த் சின்கா குற்றச் சம்பவங்களைத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதற்கான முயற்சியில் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள், காவலர்கள் முனைப்பு காட்டவேண்டும் என, அறிவுறுத்தினார்.
குறிப்பாக வழிப்பறி, பூட்டிய வீடுகளில் திருட்டு, கவனத்தை திசை திருப்பி செயின் பறிப்பு போன்ற செயல்களைத் தடுக்க, ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கின்றனர்.
முகமூடி அணிந்து, பைக்கில் சென்று திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க, குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார் தலைமையிலான தனிப் படையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஐ தென்னரசு தலைமையிலான தனிப்படையினர் 12க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அவர்களிடம் நகை பணத்தை கைப்பற்றினர்.
இருப்பினும், நகரில் போலீஸ் போன்று நடித்து பெண்களை குறிவைத்து நகை பறிப்பு அதிகரிப்பால் பெண்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. கடந்த இரண்டு நாளுக்கு முன்பு, மதுரை அண்ணாநகரிலுள்ள சதாசிவ நகரைச் சேர்ந்த அடைக்கம் மாள் (55) என்பவர் மதியம் நேரம் அருகிலுள்ள கடைக்கு சென்ற போது, அவரை இறைச்சி கடை ஒன்றில் இருந்து 3 பேர் வழி மறித்துள்ளனர்.
அவர்கள் தங்களை போலீஸ் என்றும், கடந்த ஒருவாரத்திற்கு முன், இப்பகுதியில் 15 பவுன் பெண் ஒருவரிடம் பறிக்கப்பட்டதாகவும், நீங்கள் நகையை அணிந்து செல்லக் கூடாது என, அறிவுரைகளை கூறி, அவரிடம் 8 பவுன் செயின் கழற்றி வாங்கி, காகிதத்தில் முடித்து கொடுப்பது போன்று நடித்து திருடிச் சென்றனர்.
இதே போன்று கடந்த வாரம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலும் ஒரு பெண்ணிடம் கவனத்தை திசைதிருப்பி போலீ ஸ் எனக் கூறி 3 பேர் நகை பறித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன் உசிலம்பட்டியிலும் இது போன்ற சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் ஒரே கும்பலாக இருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடங்களிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
அண்ணாநகரில் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, "எங்களது ஏரியாவில் ஏற்கெனவே நடந்த சில சம்பவங்களை அவர்கள் கூறினர். எனக்கும் அது பற்றி ஓரளவுக்கு தெரிந்ததால் நம்பினேன். என்னிடம் போலீஸ் எனக் கூறிய மூவரும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் கோபமாக பேசிக்கொண்டனர். ஒருவர் என்னிடம் பேசினாலும், மற்றொருவரின் கவனத்தை என்னை ஈர்க்க செய்யும் வகையில் அவர்களது செய்கை இருந்தது. இது போன்று எனது கவனத்தை மாற்றி என்னிடம் நகை வாங்கி காகிதத்தில் மடித்து, என் கையில் தராமல் நான் வைத்திருந்த பைக்குள் போட்டனர். நானும் அதை எடுத்து பார்க்காமல் வீட்டில் வந்து பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்தேன். போலீஸார் எனக், கூறினால் பெண்கள் நம்புவர் என, திட்டமிட்டு, இது போன்ற கும்பல் கைவரிசை காட்டுகிறது. இவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றார்.