

புதுச்சேரியில் இன்று புதிதாக 175 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 580 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 21) கூறும்போது, "புதுச்சேரியில் 4,033 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-138, காரைக்கால்-21, ஏனாம்-8, மாஹே-8 என மொத்தம் 175 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியான்பேட்டை ஜவகர் நகரைச் சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், மாஹேவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 580 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.73 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 33 ஆயிரத்து 622 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 2,542, மருத்துவமனையில் சிகிச்சை பெருவோர் 1,484 என மொத்தமாக 4,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், இன்று மட்டும் 242 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 16 (86.30 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்து 238 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 11 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்ட 33 ஆயிரத்து 622 பேரின் தற்போதைய நிலை குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வரும் நாட்களில் அரசுத் தரப்பில் இருந்து பொதுமக்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை தெரிவிக்கலாம். அதோடு, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.