

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் ஏற்றிவந்த லாரி ஓட்டுநர்களைத் தாக்கி பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைத் திருடிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லியிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ. செல்போன்களை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி கண்டெய்னர் லாரி புறப்பட்டது. சூளகிரி அடுத்த மேலுமலை என்னுமிடத்தில் இன்று (அக். 21) காலை வந்தபோது லாரி ஓட்டுநர்களான அருண் (26), சதீஷ் குமார் (29) ஆகிய இருவரையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் லாரியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் அடங்கிய 15 பெட்டிகளை திருடிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த ஓட்டுநர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளைக் கும்பலைப் பிடிக்க ஒசூர் டிஎஸ்பி முரளி மற்றும் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது.