புதுச்சேரியில் காவல் ஆய்வாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நண்பர்களிடம் பணம் பறிக்க முயற்சி; மர்ம நபருக்கு சைபர் கிரைம் போலீஸார் வலை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் காவல் ஆய்வாளர் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்ற மர்ம நபரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவர் இனியன். உதவி ஆய்வாளராக இருந்த இவர் சமீபத்தில் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக முகநூல் கணக்கு தொடங்கியுள்ளார். இந்தக் கணக்கில் இருந்து ஆய்வாளரின் நண்பர்களையும் இணைத்துள்ளார்.

தொடர்ந்து அவர்களுக்கு மெசஞ்சர் மூலம் நலம் விசாரித்த நிலையில், அவர்களும் பதில் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த நபர், ஆய்வாளரின் நண்பர்களிடம் போன் நம்பரைப் பெற்று, தனது போன் நம்பரை மாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். இப்படியே பேசிய அந்த நபர் அவர்களிடம், மெல்ல தனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது எனத் தெரிவித்து மெசஞ்சர் மூலம் பணம் கேட்டுள்ளார்.

இதில் சிலர் இனியனின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதும் பிரச்சினையா? திடீரென பணம் கேட்கிறீர்களே? என விசாரித்துள்ளனர். இதைக் கேட்டு, ஆய்வாளர் இனியன் அதிர்ச்சி அடைந்தார். தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு பணம் கேட்டிருப்பது அப்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நேற்று (அக். 16) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வாளர் இனியன் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கியது யார்? எதற்காக தொடங்கப்பட்டது? பணம் பறிக்க மட்டுமா? அல்லது வேறு காரணத்துக்காகவா எனப் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஆய்வாளர் இனியனைப் போலவே புதுச்சேரி போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு காவலர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் புதுச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in