குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில் வரிச்சியூர் செல்வத்திடம் விசாரணை  

குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில் வரிச்சியூர் செல்வத்திடம் விசாரணை  
Updated on
1 min read

குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கொலையில், பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திடமும் தனிப்படையினர் விசாரித்துள்ளனர்.

மதுரை வரிச்சியூர் அருகிலுள்ள குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன், அவருடன் இருந்த ஊராட்சி ஊழியர் முனியசாமி ஆகியோர் கடந்த 11-ம் தேதி இரவு ஊருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கருப்பாயூரணி காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

இருப்பினும், கொலையாளிகளைப் பிடிப்பதில் தொடர்ந்து தொய்வு நிலை நீடிக் கிறது. போட்டியின்றி தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு தேர்தல் தொடர்பான பெரிய எதிர்ப்பு உள்ளதா, தனிப்பட்ட முறையில் உறவினர்களுக்குள் பிரச்சினைகள் உண்டா போன்ற பல்வேறு நிலைகளில் பலரிடமும் விசாரிக்கின்றனர். ஆனாலும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, கொலையாளிகளைக் கைது செய்ய முடியாமல் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது தரப்பிலும் விசாரிக்க திட்டமிட்ட தனிப்படையினர், அவரிடமும் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘ குன்னத்தூரைப் பொறுத்தவரை சமீபகாலமாக இரு சமூகத்தினர் இடையே சுழற்சி முறையில் போட்டியின்றி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதன்படி 2020-ல் கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டி இருந்தால் அவ்வாறு தேர்வாகி இருக்க முடியாது. இருப்பினும், ரவுடி வரிச்சியூரின் செல்வத்தின் மனைவி அப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

வாக்கு எண்ணும் போது, குன்னத்தூரில் அவர்கள் எதிர்பார்த்த வகையில் ஓட்டுக்கள் பதிவாகவில்லை. கிருஷ்ணன் செல்வத்தின் தம்பிக்கு எதிராக செயல்பட்டதே இதற்கு காரணம் என, செல்வம் தம்பி தரப்பினர் பேசியுள்ளனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் வரிச்சியூர் செல்வத்திடம் விசாரிக்கப்பட்டது. கிருஷ்ணன் மட்டுமின்றி, அவருடன் இருந்த முனியசாமியும் சேர்ந்து கொல்லப்பட்டு இருப்பதால் இதற்கு வலுவான காரணம் ஏதோ இருக்கிறது. அதற்காகவே பல கோணங்களில் விசாரிக்கிறோம். சற்று தாமதமானாலும் சரியான கொலையாளிகளை கைது செய்யவேண்டும் என்பதே நோக்கமே தவிர வேறு எதுவும் காரணமல்ல’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in