

தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனையின் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது என முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் தெரிவித்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் முழு உருவுருவ செண்கல சிலைக்கு ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் பா.ராம்மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் செய்தது தப்பு தான்.
தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதை செய்தது யார் என்றாலும் எனக்குக் கவலை இல்லை. நான் சுத்தமானவன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
யார் யாரோ என்னவெல்லாமோ பேசிக் கொள்கிறார்கள். அவற்றிற்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை. பதில் கொடுக்க வேண்டிய அவசியத்திலும் நான் இல்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது, யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை.
ஆனால் தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனையின் பின்னணியில் ஒரு சதி இருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அதை நான் சொல்வேன்” என்றார் அவர்.