

பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு எதிராக மதுரையில் காங்கிரஸ் கட்சியினர், மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பற்றியும், மாற்றுத்திறனாளிகளைத் துண்புறுத்தும் வகையிலும் பேசிய குஷ்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வரதராஜன் தலைமையில் அக்கட்சியினர் தென்மண்டல ஐஜி முருகனிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தகுஷ்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதன்பின், சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அகில இந்திய காங்கிரஸ்கட்சி மூளைவளர்ச்சி இல்லாத ஊனமுற்ற கட்சி என்றும், செயல்படாத கட்சி எனவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளைப் புண்புறுத்தும் வகையிலும் அமைந்த அவரது பேச்சு மாற்றுத் திறனாளிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினக்கும் மிகுந்த மன வேதனை அளித்துள்ளது.குஷ்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுடன் நகர் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துப்பாண்டி, சிறுபான்மை பிரிவு மாநிலத் துணை தலைவர் பீர்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றிருந்தனர்.
இதற்கிடையில் குஷ்புக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.