பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவே  சட்டங்களைக் கொண்டு வருகிறது பாஜக: திருமாவளவன் விமர்சனம்  

தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்
தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்
Updated on
1 min read

இந்துக்களின் நலனைப் பாதுகாக்கவே நாங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறோம் எனக் கூறும் பாஜக, பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவே சட்டங்களைக் கொண்டு வருகின்றது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வங்கி அதிகாரிகளுக்கான தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அண்ணா சிலை அருகே இன்று (அக். 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் தலைமை தாங்கிப் பேசினார். இதில், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்துக்களின் நலனைப் பாதுகாக்கவே நாங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறோம் எனக் கூறும் பாஜக, பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவே சட்டங்களைக் கொண்டு வருகிறது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் சட்டம், வேளாண் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் பெரும்பான்மை இந்துக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளன.

தற்போது அவர்கள் வங்கி அதிகாரிகள் தேர்வு ஒன்றை அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்ற பெயரில் முன்னேறிய சமூகப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர்.

பொதுப்பிரிவினரின் இட ஒதுக்கீட்டில் கைவைக்காமல், எஸ்.சி. பிரிவினருக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் 2 சதவீதத்தையும், எஸ்.டி. பிரிவினருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 1.5 சதவீதத்தையும், ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 சதவீதத்தையும் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது ஒன்றே சமூக நீதிக்கும், பெரும்பான்மையான இந்து சமூகத்துக்கும் பாஜகவினர் எதிரானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் தமிழக மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் நிகழாண்டில் ஓபிசி மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாஜக அரசு பெரும்பான்மை இந்துக்கள் விரோத அரசாகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது" என திருமாவளவன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in