

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல்கலாம்காலத்தால் அழியாது நிற்பவர் என்றுமுதல்வர் பழனிசாமி, அரசியல்கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 89-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அப்துல்கலாமின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் அப்துல்கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள், மாணவர்கள் அப்துல்கலாமின் படத்துக்கு மலர்தூவி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
இதற்கிடையே, முதல்வர், கட்சித் தலைவர்கள் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
முதல்வர் பழனிசாமி: கனவு காணுங்கள், கனவுகளில் இருந்துசிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 89-வது பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: நாட்டுக்காகவும், நாடு வளம் பெற மாணாக்கர்களை உருவாக்குவதிலும் தனக்கான வாழ்வை அர்ப்பணித்த முன்னாள்குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளில் அவரது ‘வல்லரசு இந்தியா’ கனவு மெய்ப்பட அனைவரும் ஒற்றுமையோடு உழைக்க உறுதியேற்போம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: எளிய குடும்பத்து மாணவனும் விஞ்ஞானியாக முடியும் என்றுசாதித்துக் காட்டி உத்வேகமூட்டியவர். அவர் நேசித்த அண்ணா பல்கலைக்கழகம் இன்னமும் பல நூறு கலாம்களை உருவாக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்த வேண்டும். அவரின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: எல்லா தலைவரின் அன்பையும் பெற்று மக்களின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்தவர். மாணவர்கள், இளைஞர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்துக்கும் கனவுகளை விதைத்த ஏவுகணை நாயகரை எந்நாளும் போற்றிடுவோம்.