

புதுச்சேரியில் இன்று புதிதாக 245 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 570 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக், 15) கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் 4,649 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 174, காரைக்காலில் 39, ஏனாமில் 5, மாஹேவில் 27 என மொத்தம் 245 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.75 ஆக உள்ளது.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் புதுச்சேரியில் 1,436, காரைக்காலில் 84, ஏனாமில் 49, மாஹேவில் 83 என 1,652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல, புதுச்சேரியில் 2,266, காரைக்காலில் 424, ஏனாமில் 39, மாஹேவில் 170 என 2,899 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 4,551 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 178 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 7 பேர், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 365 (84.24 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 582 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 793 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என முடிவு வந்துள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் ஒரு வாரத்தில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தினமும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா தொற்றைக் குறைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.