புதுச்சேரியில் புதிதாக 246 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் ஒருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் இன்று புதிதாக 246 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 14) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 4,521 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 189, காரைக்காலில் 41, ஏனாமில் 6, மாஹேவில் 10 என மொத்தம் 246 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.76 ஆக உள்ளது.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. இதில் புதுச்சேரியில் 1,426, காரைக்காலில் 97, ஏனாமில் 57, மாஹேவில் 60 என 1,640 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல, புதுச்சேரியில் 2,285, காரைக்காலில் 389, ஏனாமில் 33, மாஹேவில் 178 என 2,885 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 4,525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 175 பேர், காரைக்காலில் 50 பேர், ஏனாமில் 23 பேர், மாஹேவில் 39 பேர் என மொத்தம் 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 152 (84.21 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 59 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 412 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
சுகாதாரத்துறைக்கு அதிக நிதி தேவை இருக்கிறது. அது சம்பந்தமாக முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தெரிவிப்பேன். மேலும், நாளை முதல் தொற்று பாதித்த 32 ஆயிரத்து 245 பேருடைய ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்கள் எப்படி உள்ளனர். தற்போதைய நிலை என்ன? வேறு பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து அறியப்படும். அதன்பிறகு, பாதிப்பு உள்ள நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
