

தஞ்சாவூர் அருகே தென்னங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி, நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய 267 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளென்றுக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கொள்முதல் நிலையங்களில் 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இரவு பகலாக காத்திருந்து விரக்தியடைந்த விவசாயிகள் தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் நெல்லை கொட்டி, தேங்கிய நெல்லை உடனே கொள்முதல் செய்யக் கோரி நேற்று மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த கள்ளப்பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கழனியப்பன், கொள்முதல் நிலைய அலுவலர் சரவணன் ஆகியோர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, நெல் கொள்முதல் நிலைய அலுவலர் சரவணன் கூறியபோது, “கொள்முதல் நிலையத்தில் தேங்கும் மூட்டைகளை அப்புறப்படுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால், மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால், கொள்முதல் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு தேங்கியுள்ள மூட்டைகளை அப்புறப்படுத்திய பிறகு கொள்முதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்” என்றார்.தஞ்சாவூர் அருகே தென்னங்குடியில் கடந்த 3 நாட்களாக கொள்முதல் செய்யாததை கண்டித்து, நெல்லை சாலையில் கொட்டி நேற்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.