

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நலமாக உள்ளதாகவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று (அக். 11) மட்டும் 5,015 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 65 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கரோனா தொற்றிலிருந்து 5,005 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2,038 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 95 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 80 லட்சத்து 84 ஆயிரத்து 587 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (அக். 12) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.