‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் முழுமை பெறாமல் சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கியது யார்?- நகராட்சி நிர்வாகத்துக்கு டிஆர்ஓ நோட்டீஸ்!

திருப்பத்தூர் நகராட்சியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது.
Updated on
2 min read

திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் முடிக்கப்படாமல், பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியதால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெளியிட்டை செய்தியைத் தொடர்ந்து, அதற்கான விளக்கம் கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.104 கோடி செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. இப்பணிகள் அதற்கான காலக்கெடு முடிந்து தற்போதும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த மாதம் தமிழ்நாடு குடிநீர் மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் நேரில் ஆய்வு செய்து 15 நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிவுற்ற பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கவும் அப்பணிகள் முடிந்த உடன் அந்தப் பகுதிகளில் தார் சாலை அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், பணிகள் முடிவுறாமல், தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மூலம் அரசு நிதி தவறாகச் செலவிடப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளருமான பரத் என்பவர், மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு கொடுத்த பிறகுதான் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், விதி மீறி தற்போது ரூ.15 கோடிக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு நகராட்சி அதிகாரிகள் சிலர் அனுமதி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரசு ஒதுக்கீடு செய்த ரூ.15 கோடி நிதி மக்களுக்குப் பயன்தராது என அதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று வெளியானது.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நகராட்சியில் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து முழுமையாக விளக்கமளிக்கும் படி நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகராட்சி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இதற்கிடையே, பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்காமலேயே சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய மாவட்ட நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் நாளை மறுநாள் (13-ம்) நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நகராட்சி அதிகாரிகள் கதிகலங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in