

மத்திய அரசு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு எதிராக தவறான தகவல் தருவதை புதுச்சேரி முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான இலவச அரிசி, துணி உள்ளிட்ட திட்டங்களை துணைநிலை ஆளுநரும், மத்திய அரசும் தடுத்துவிட்டதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (அக். 10) வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் பதிவு:
"மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவை பயனாளிகளுக்கான நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தினை ஏற்று உறுதி செய்திருக்கிறது.
இதன் காரணமாக, புதுச்சேரியில் கோடிக்கணக்கான ரூபாய் நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. எந்தவொரு பயனாளிகளிடமிருந்து, இதனை எதிர்த்து ஒரு புகார் கூட வரவில்லை. தலைமைச் செயலர் மற்றும் நிதித் துறையினரால் முறையாக ஆராயப்பட்டு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் செயலகம் அனுமதித்திருக்கிறது.
நேரடி பணப்பரிமாற்ற முறையால் மக்களுக்கு ஏற்படும் நன்மை குறித்து திருப்தியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக முதல்வர் தனக்குத் தெரிந்த சில காரணங்களுக்காகப் புலம்புகிறார்.
எந்தவொரு நிதி இழப்பும் இல்லாமல், லட்சக்கணக்கான மக்கள் அனைத்தையும் பெறுகிறார்கள் என்பதில், அவர் நிம்மதியும், நன்றியுணர்வும் கொண்டிருக்க வேண்டும். நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் தவறான முடிவுகள் வர வாய்ப்பில்லை.
பரிமாற்றத்தில் வருவாய் இழப்பு இல்லை, பணம் நேரடியாக ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்கின்றன. கமிஷனோ, இடைத்தரகர்களோ இல்லை, காத்திருக்கத் தேவை இல்லை. எவ்வித கெடுதலும் இல்லை, எந்த ஊழலும் இல்லை. யாருடைய பரிந்துரையின் பேரிலும் கொடுக்கவும், எடுக்கவும் முடியாது.
எனவே, மத்திய அரசுக்கு எதிராகவும், ஆளுநர் அலுவலகத்துக்கு எதிராகவும் மக்களுக்குத் தவறான தகவல்களை வழங்குவதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீதிமன்றங்களே நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட உண்மையை மக்களுக்கு அவர் சொல்ல வேண்டும்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.