

கரோனா பேரிடர்க் காலத்தில் மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் முன்களப் பணியாளர்களாக இருந்து அளப்பரிய சேவை செய்து வருகிறார்கள். இவர்களைப் போற்றும் வகையில் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு, மெடிக்கல் எக்ஸலன்ஸ் விருது வழங்கிக் கவுரவிக்க உள்ளது.
உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து உலக அளவில் தமிழை அடிநாதமாகக் கொண்டு பல்வேறு துறை சார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறது. அதில், மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் சேவை செய்யும் தமிழ் மருத்துவர்கள், தமிழர்கள் நடத்தும் மருத்துவமனைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து தமிழ் மெடிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது.
இந்த அமைப்பின் மூலம் சர்வதேசத் தமிழ் மருத்துவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்கள் தங்களுடைய அனுபவத்தை, பயிற்சி மருத்துவர்களுக்குப் பகிர்ந்து வருகிறார்கள். மருத்துவ வல்லுநர்கள் தங்களது துறை சார்ந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அதன் மூலம் உரிய சிகிச்சையளித்து, ஆபத்தில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம், மருத்துவத் துறையில் சாதனை புரிந்து சிறந்து விளங்கும் மருத்துவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு, தமிழகத்தில் கரோனா பேரிடர்க் காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருந்து சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஊடகத் துறையினர், தன்னார்வ அமைப்புகள், உறவினர்களால் இறுதிச் சடங்கு செய்ய முடியாதவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் தன்னார்வலர்கள் மற்றும் கரோனா விழிப்புணர்வுப் படங்களைத் தயாரித்த திரைப்பட விளம்பரத் தூதர்கள் ஆகியோருக்கு மெடிக்கல் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட உள்ளது.
அக்டோபர் 17-ம் தேதி சென்னையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார், ''ஒவ்வொரு நாட்டிலும் நமது தமிழர்கள் மருத்துவத் துறையிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு நாட்டிலும் ‘தமிழ் மெடிக்கல் அசோசியஷன்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இந்த அமைப்பில் அங்கத்தினர்களாக உள்ளவர்களில் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் துறைக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்தவர்களைக் கவுரவித்து உற்சாகப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மெடிக்கல் எக்ஸலன்ஸ் விருதுகளை வழங்கி வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில் உலகின் தலைசிறந்த தமிழ் மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா காலம் அனைவரையும் முடக்கிவிட்டது. அதனால் உலக அளவில் பணியாற்றும் தமிழ் மருத்துவர்களைத் தமிழகத்துக்கு அழைத்துவந்து கவுரவிக்க முடியாத சூழல். அதனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் சேவை மனிதர்களுக்கு இந்த விருதுகளை அர்ப்பணிக்க முடிவெடுத்திருக்கிறோம்.
இந்த விருதுக்காக, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 15 பேரைத் தேர்வு செய்திருக்கிறோம். இதில்லாமல், ஊரகப் பகுதியில் சிறந்த சேவையாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 4 விருதுகள் வழங்கப்பட உள்ளன. தவிர, காவல் துறையில் இருவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், தூய்மைப் பணியாளர்கள் இருவர், ஊடகத் துறையினர் இருவர், ஆதரவற்றோர் உடல்களை எடுத்து அடக்கம் செய்யும் தன்னார்வலர் ஜின்னா ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இவர்களோடு, கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரப் படங்களைத் தயாரித்த, அதில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட 12 பேருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படும் இந்த விழாவில் ஊடகத்தினர் உள்பட 100 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். எத்தகைய சூழ்நிலையிலும் தயக்கமோ, சோர்வோ இன்றி செயல்படும் முன் களப்பணியாளர்களைக் கவுரவிப்பது என்று சொல்வதைவிட அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே இந்த விழா நடத்தப்படுகிறது.
விருது பெறும் சேவையாளர்கள் மட்டும்தான் கரோனா காலத்தில் சிறந்த சேவையாற்றினார்கள் என்று அடையாளப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. கரோனா யுத்தத்தில் எண்ணற்ற சேவை மனிதர்கள் தங்களின் இன்னுயிரையும் பொருட்படுத்தாது களத்தில் நிற்கிறார்கள். அத்தனை பேரையும் ஓரிடத்தில் சேர்க்க முடியாது என்பதால் ஓர் அடையாளமாக அவர்களில் ஒரு சிலரை மட்டும் அழைத்துக் கவுரவிக்கிறோம். இந்த விருதுகள் கரோனா களத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சேவையாற்றிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்குமான ஒட்டுமொத்த அங்கீகாரம்'' என்றார்.