வெடி பொருள் வெடித்ததில் காவலர் காயம்

உத்திரமேரூர் அருகே எடமிச்சி பகுதியில் வெடி பொருட்களை தீயிட்டு எரித்தபோது வெடித்த வெடிமருந்து
உத்திரமேரூர் அருகே எடமிச்சி பகுதியில் வெடி பொருட்களை தீயிட்டு எரித்தபோது வெடித்த வெடிமருந்து
Updated on
1 min read

உத்திரமேரூர் அருகே உள்ள திருப்புலிவனம் கிராமத்தில் கடந்த 2018-ம்ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கிவைத்திருந்த காதர் மொய்தீன் என்பவரை உத்திரமேரூர் போலீஸார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த வெடி தயாரிப்பு மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்த வெடி மூலப்பொருட்களை செயலிழக்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து வெடி பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்தவெடிமருந்து மூலப் பொருட்களை உத்திரமேரூர் அடுத்த எடமிச்சி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்துக்கு எடுத்துச் சென்று செயலிழக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர். வெடி பொருட்களை தொலைவில் இருந்து வெடிக்கச் செய்தனர்.

பின்னர் வெடிகள் அனைத்தும் வெடித்து விட்டதாக நினைத்து அந்தப் பொருட்களை தீயிட்டு எரித்தனர். அப்போது ஒரு வெடி திடீரென்று வெடித்ததில் அருகில் இருந்த காவலர் பாலமுருகன் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பாலமுருகனை மீட்ட போலீஸார் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in