Last Updated : 06 Oct, 2020 08:41 PM

 

Published : 06 Oct 2020 08:41 PM
Last Updated : 06 Oct 2020 08:41 PM

மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ஜாமீன் மறுப்பு?- நிர்வாகத்திற்கு எதிராக சிறுவர்கள் போராட்டம்; 16 பேர் வேறு இல்லங்களுக்கு மாற்றம் 

மதுரை  

மதுரையிலுள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஜாமீன் மறுக்கப்படுவதாகக் கூறி, இல்ல நிர்வாகத்திற்கு எதிராக அங்கு அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் போராட்டம் செய்தனர்.

மதுரை தெப்பக்குளம் அருகில் காமராஜர் சாலையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை அடைக்கும் ‘கூர்நோக்கு இல்லம்’ ( சிறுவர்களுக்கான சீர் திருத்தப்பள்ளி ) செயல்படுகிறது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த குற்றச்செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 35-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் கவுன்சிலிங் போன்ற மனநல பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. குற்றத் தன்மைக்கேற்ப அவர்களுக்கு கூர்நோக்கு நிர்வாகம் ஜாமீன் வழங்குவது நடைமுறையில் உள்ள நிலையில், கொலை வழக்கில் சிக்கிய சிறுவர்கள் சிலர் சொந்த ஜாமீன் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இல்லத்தில் தங்கியுள்ள சிறார் சிலர் திடீரென சேர், டேபிள் டீயூப் லைட்டுகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் தடுக்க, உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது பற்றி தெப்பக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீ ஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். துணை ஆணையர் சிவ பிரசாத் அங்கு விரைந்தார். போலீஸார் குவிக்கப்பட்டடனர். விசாரணையில், கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் தங்களை சொந்த ஜாமீனில் விடுவிக்க இல்ல நிர்வாகம் மறுப்பதாகக் கூறி, அவர்கள் ரகளை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக கூர்நோக்கு நிர்வாகத்திடம் போலீஸார் ஆலோசனை நடத்தினர்.

ஜாமீன் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது என்றாலும், ஓரிரு சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸார் கூறுகையில், ‘‘கூர்நோக்கு இல்லத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கக்கோரி இல்ல நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் யாரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யாமல் இல்ல நிர்வாகம் மறுத்துள்ளது.

இதை கண்டித்து தான் சிறுவர் கள் ரகளை செய்து இருப்பது தெரிகிறது. இது குறித்து இல்ல நிர்வாகத்திடம் பேசி, முடிவெடுக்கப்படும் என, உறுதியளித்தால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில் பிரச்சினைக்கு காரணமாக 16 சிறுவர்களை வேறு கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x