

மின்வாரிய இணையதள சர்வரில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையால் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கான மின் இணைப்பு, விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வந்தனர்.
பொதுமக்கள் அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்க 2016-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. இருந்தபோதிலும் பெரும்பாலானோர் அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வந்தனர்.
இதையடுத்து மார்ச் 1-ம் தேதி முதல் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டுமென மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அனைவரும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் மின்வாரிய இணையதளத்தில் அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுவதால் மக்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ‘‘ மின்வாரிய இணையதள மூலம் மின் இணைப்புக்கு விண்ணப்பித்தாலும் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப நகல் கொடுக்க வேண்டியுள்ளது.
மேலும் மின்வாரிய இணையதள சர்வர் பிரச்சினையால் உடனடியாக விண்ணப்பிக்க முடிவதில்லை. விண்ணப்பிக்கவே பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் இப்பிரச்சினையை மின்வாரியம் தீர்க்க வேண்டும்,’’ என்று கூறினார்.