

வக்பு வாரியம் அமைக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் சமாதானப்படுத்தினார். அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு உத்தரவிடக் கோரினர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள படிக்கட்டுகளில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் அசனா ஆகியோர் அமர்ந்து அரசுக்கு எதிராகக் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய போர்டுகளை வைத்துத் தர்ணாவில் ஈடுபட்டனர்.
போராட்டம் தொடர்பாக அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன் கூறுகையில், "முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்காக அனைத்து மாநிலங்களிலும் வக்பு போர்டு செயல்பட்டு வருகிறது. மாநில அரசால் அமைக்கப்படும் இந்த வக்பு போர்டு 5 ஆண்டு காலம் செயல்படும். அதன்பிறகு மாற்றி அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், புதுச்சேரியில் வக்பு போர்டின் ஆயுட்காலம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தும், அரசு அதற்கான உறுப்பினர்களை நியமிக்காததால் வக்பு போர்டு செயல்படாமல் உள்ளது.
இதனால் முஸ்லிம் சமுதாய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நலத் திட்டங்கள் கிடைக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள வக்பு போர்டிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்து அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைந்து வக்பு வாரிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான கோப்பு முதல்வருக்கு அனுப்பப்படும்" என்றார்.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், ராஜ்நிவாஸ் சென்று ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து வக்பு வாரியத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க அரசுக்கு உத்தரவிடக் கேட்டுக்கொண்டனர்.