

புதுச்சேரியில் இன்று புதிதாக 343 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 539 ஆக உள்ளது.
இதுதொடர்பாக, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 4) கூறும்போது, "புதுச்சேரியில் 3,725 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-213, காரைக்கால்-53, ஏனாம்-15, மாஹே-62 என மொத்தம் 343 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் 4 பேர் என ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கரியமாணிக்கத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஜிப்மரிலும், காரைக்காலில் 43 வயது ஆண், 81 வயது மூதாட்டி, 30 வயது வாலிபர், 72 வயது முதியவர் ஆகிய 4 பேரும் காரைக்கால் பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.85 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29 ஆயிரத்து 89 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,516 பேர், காரைக்காலில் 507 பேர், ஏனாமில் 66 பேர், மாஹேவில் 55 பேர் என 3,144 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,372 பேர், காரைக்காலில் 95 பேர், ஏனாமில் 93 பேர், மாஹேவில் 83 பேர் என 1,643 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,787 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் புதுச்சேரியில் 328 பேர், காரைக்காலில் 64 பேர், ஏனாமில் 21 பேர், மாஹே 6 பேர் என மொத்தம் 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 84 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 172 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
தற்போது புதுச்சேரிக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கியுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை. முகக்கவசம் அணிவதில்லை. அவர்கள் மூலமாக நமக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, புதுச்சேரி மக்கள் நூறு சதவீதம் முகக்கவசம் அணியுங்கள். தனிமனித இடைவெளிடையை கடைபிடியுங்கள். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.