

புதுச்சேரியில் இன்று புதிதாக 225 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 81.19 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (அக். 3) கூறும்போது, "புதுச்சேரியில் 3,410 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 191 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 7 பேர், மாஹேவில் 6 பேர் என மொத்தம் 225 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் ஆர்கே நகரை சேர்ந்த 54 வயது ஆண், நிரவி பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.86 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 28 ஆயிரத்து 752 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,574 பேர், காரைக்காலில் 471 பேர், ஏனாமில் 59 பேர், மாஹேவில் 30 பேர் என 3,134 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,436 பேர், காரைக்காலில் 146 பேர், ஏனாமில் 106 பேர், மாஹேவில் 52 பேர் என 1,740 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 308 பேர், காரைக்காலில் 53 பேர், ஏனாமில் 23 பேர், மாஹேவில் 12 பேர் என மொத்தம் 396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 344 (81.19 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 99 ஆயிரத்து 374 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 66 ஆயிரத்து 911 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கரோனா பாதிப்பு விகிதம் கணிசமாக குறைந்திருக்கிறது. இருப்பினும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.