Published : 02 Oct 2020 06:39 PM
Last Updated : 02 Oct 2020 06:39 PM

காவல் துறை துணை ஆணையர்களுக்கு நிர்வாக துறை நடுவர் அந்தஸ்து அரசாணை செல்லுமா? -தனி அமர்வை அமைத்து விசாரிக்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சென்னை


கஞ்சா வழக்கில் கைதான பெண் பிணைப்பத்திரத்தை மீறியதால் அவரை ஒராண்டு சிறையில் அடைக்க நிர்வாகத்துறை நடுவர் (எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்) அந்தஸ்த்தை காவல்துறை துணை ஆணையர் பயன்படுத்தியதை உயர்நீதிமன்றம் அனுமதிக்க மறுத்து, அதிகார பகிர்வுக்கு முரணான அரசாணை உள்ளதா? என்பதை விசாரிக்க தனி அமர்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சென்னை தாம்பரத்தை சேர்ந்த தேவி என்பவர், எதிர்காலத்தில் நன்னடத்தையுடன் நடப்பதாக கூறி இரு நபர் உத்தரவாதத்துடன் பிணைப்பத்திரம் ஒன்றை 2019 டிசம்பர் 16ல் எழுதி கொடுத்துள்ளார்.

ஆனால் அடுத்த ஐந்தாம் நாளான டிசம்பர் 21-ல் கஞ்சா வைத்திருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால், பிணைப்பத்திரத்தை மீறியதாக கூறி தேவியை ஒராண்டு சிறையில் அடைக்க நிர்வாகத்துறை நடுவர் (எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்) அந்தஸ்த்தைப் பயன்படுத்தி காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேவி தாக்கல் செய்த வழக்கில், அவரது மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மாவட்ட காவல்துறை சட்டப்படி, காவல்துறையினருக்கு நீதித்துறை அதிகாரம் வழங்கக்கூடாது என கூறப்பட்டுள்ளதால், தேவியை சிறையில் அடைத்த காவல் துறை துணை ஆணையரின் எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நலனுக்காக காவல்துறை சட்டத்தில் எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டுக்கான நீதித்துறை அதிகாரத்தை ஆங்கிலேய அரசு வழங்கியதாகவும், அந்த அதிகாரத்தின் கீழ் மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தண்டிக்கப்பட்டதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விடுதலைக்கு பின், நிர்வாகம் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை பிரிக்கும் வகையில், சட்டமேதை அம்பேத்கரால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 50-வது பிரிவு உருவாக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அதிகாரங்களை பிரித்து தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ராஜாஜி அரசாணை பிறப்பித்ததாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காவல் துணை ஆணையராக இருப்பவரை எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டாக நியமித்து 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், ராஜாஜி கொண்டுவந்த அரசாணைக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை ஆணையருக்கு எக்சிகியூட்டிவ் மாஜிஸ்திரேட் அந்தஸ்து கொடுப்பதை தொடர்ந்து அனுமதித்தால், வரலாறு மீண்டும் திரும்பிவிடும் என்றும், இந்தியா போலீஸ் ராஜ்ஜியமாக மாறிவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வு திட்டத்திற்கு முரணாக 2013-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியுள்ளதால், தனி அமர்வை அமைத்து விசாரிக்க தலைமை நீதிபதிக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x