

தமிழக விவசாயிகள் ஒற்றை நாற்று நடவு முறைக்கு மாறிவருவது அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் எனும் நம்பிக்கையும் வேளாண் துறையினரிடம் உருவாகியிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள செண்பகப்புதூர், கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகளைக் கொண்ட கிராமம் ஆகும். ஆத்தூரு கிச்சிலி சம்பா, சொர்ணா மசூரி ஆகிய மரபு ரக நெல் ஒற்றை நாற்று முறையில் நடப்படுவது இக்கிராமத்தின் தனிச்சிறப்பு. இதன் முகப்புப் பகுதியில் உள்ள குழித்தோட்டத்திற்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமல்ல, வெளியூர் விவசாயிகளும் வந்து அங்கு நடக்கும் நெல்நாற்று நடவைப் பார்வையிட்டு, சந்தேகங்கள் கேட்டுச் செல்கிறார்கள்.
''நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்குப் பின்பு எப்படி விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறி வருகிறார்களோ, அதுபோல இப்போது நெல் விவசாயிகள் பலரும் இந்த ஒற்றை நாற்று நடவு முறைக்கு மாறிவருகின்றனர்'' என்கிறார் இந்த குழித்தோட்டத்தில் நெல் நாற்று நடவு செய்யும் விவசாயி சுடர் நடராஜன்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''பொதுவாக நெல் நடவில் குத்துக்குத்தாக நாற்று நடவு செய்வார்கள். அப்படி ஒரு ஏக்கர் நடவு செய்ய 30 கிலோ விதை நெல் தேவைப்படும். அதுவே இந்த ஒற்றை நெல் நாற்று நடவு முறையில் 3 கிலோ விதை நெல் போதுமானது. குத்து நாத்து நடவு முறைக்குத் தாய்ப் பயிருக்குத் தேவைப்படும் தண்ணீர் பாய்ச்சல் இதற்குத் தேவைப்படாது. இதன் மூலம் 80 சதவீதம் தண்ணீர் மிச்சப்படும்.
13 நாட்களில் நாற்று எடுத்து நடவு தொடங்கிவிடலாம். ரசாயன உரம், மருந்துகள் போன்றவற்றை உபயோகிப்பதில்லை. இயற்கை உரம், பூச்சி மருந்துகள்தான். பூச்சி விரட்டிகளாக வேம்பு, ஆடாதொடை, எருக்கு, ஆமணக்கு ஆகியவற்றை அரைத்துக் கரைசல் செய்து தெளித்துவிடுகிறோம்.
சாதாரண நெல் ரகம் கிலோ ரூ.30 வரை விற்கும். கிச்சிலி சம்பா, சொர்ணா மசூரி ஆகியவை கிலோ ரூ. 70-க்கு விலை போகின்றன. விதை, நடவு, தண்ணீர், உரம், மருந்து, வேலை எல்லாமே 30-லிருந்து 80 சதவீதம் வரை மிச்சப்படுத்திக் கொடுப்பதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் இதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். கீழ்பவானி பாசன விவசாயிகளில் பலர் இந்த முறைக்கு மாறிவருகிறார்கள்.
இந்த ஒற்றை நாற்று நடவு விவசாய முறை மடகாஸ்கர் தீவில் நடைமுறையில் உள்ளது. அந்தப் பாரம்பரிய விவசாயமே நம்முடையது. அதை நடைமுறைப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் நம்மாழ்வார். 1988-ல் தமிழ்நாட்டில் முதலில் இதை முயற்சி செய்தவர் அரச்சலூர் செல்வம். 2002-2008-ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த நாற்று நடவு முறையை ஆய்வுக்கு எடுத்தது.
இது வெற்றிகரமான முறை என்பதால் விவசாயிகள் இதைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி ஆலோசனைகளும் மானியமும் வழங்கியது. இப்போது இந்நடவு முறை பரவலாகிவிட்டதால் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. எங்கள் தோட்டத்தில் மூன்று வருடங்களாக இந்த நடவு முறையை செய்து வருகிறேன். ஒரு முறைகூட மகசூல் குறைந்ததில்லை.''
இவ்வாறு சுடர் நடராஜன் கூறினார்.