

கிருஷ்ணகிரியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜைக்காக பொரி தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை ஆர்டர் கிடைக்காததால், 50 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்ய செய்ய உற்பத்தி யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவற்றில் பிரசாதமாக பொரி வழங்கப்படுகிறது.இதனால், ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொரி தயாரிக்கப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். வரும் 25-ம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்டிகளில் பொரி தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி, கேரள, ஆந்திர மாநிலங்களுக்கும், தமிழகத்தில் வேலூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் நிக ழாண்டில் கரோனா பிரச்சினையால் இதுவரை ஆர்டர் கிடைக்கவில்லை எனவும், இதனால் 50 சதவீதம் உற்பத்தியை மட்டுமே செய்ய உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பொரி மண்டியின் உரிமையாளர் எஸ்.எம்.கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘ஆயுதபூஜைக்காக வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பே பொரி உற்பத்தி தொடங்கிவிடுவோம். ஆனால் கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தற்போது 3 வாரங்களுக்கு முன்னர் தான் உற்பத்தி தொடங்கி உள்ளோம். அதுவும் வழக்கமாக ஆயுதபூஜைக்காக நாள் ஒன்றுக்கு 600 மூட்டைகள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் மொத்த வியாபாரிகளிடமிருந்து இதுவரை ஆர்டர் கிடைக்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 மூட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்கிறோம். வழக்கத்தை விட 50 சதவீதம் குறைவாக பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.
கரோனாவால் பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் தொழிற் சாலைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு வழக்கமானஆர்டர்கள் கிடைப்பது கடினம். பொரி உற்பத்திக்கான அரிசியின் விலை சீராக உள்ளது. ஆனால் விறகு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 50 படி கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.380 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது,’’ என்றார்.