

புதுச்சேரியில் இன்று புதிதாக 489 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 24 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 525 ஆகவும் ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 1) கூறும்போது, "புதுச்சேரியில் 5,153 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-379, காரைக்கால்-79, ஏனாம்-11, மாஹே-20 என மொத்தம் 489 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.87 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 28 ஆயிரத்து 24 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,590 பேர், காரைக்காலில் 533 பேர், ஏனாமில் 76 பேர், மாஹேவில் 31 பேர் என 3,230 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,430 பேர், காரைக்காலில் 155 பேர், ஏனாமில் 114 பேர், மாஹேவில் 65 பேர் என 1,764 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 375 பேர், காரைக்காலில் 20 பேர், ஏனாமில் 12 பேர், மாஹேவில் 24 பேர் என மொத்தம் 431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 505 (80.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 568 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 206 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக சராசரியாக 4,500 பரிசோதனை செய்து வருகிறோம். இதன் மூலம் தொற்று பாதிப்பு 10 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கு மேல் சென்றது. தற்போது, 1.87 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், தினமும் 400-500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசு 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், மார்க்கெட், ஷாப்பிங் மால் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஏனாமில் அனைத்து மாணவர்களுக்கும் தலா 4 முகக்கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 2 முகக்கவசங்கள் வழங்குமாறு பள்ளி கல்வித்துறையிடம் கூறியுள்ளேன்.
கடந்த ஓராண்டில் ஏனாமில் பள்ளி மாணவர்கள் 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் ஏனாமில் தொண்டு நிறுவனம் மூலம் பிளஸ் 2, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு நவ.14-ம் தேதி தலைக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் அரசே செய்ய முடியாது. தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் பங்களிப்பும் தேவை.
வாராந்திர சந்தைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேச உள்ளேன்.
மற்ற நாடுகளில் கரோனா 2-வது அலை வீச தொடங்கியுள்ளது. அது பரவினால் நமக்கு மேலும் கஷ்டமாக இருக்கும். தற்போது பல்வேறு தளர்வுகள் வந்துவிட்டன. எனவே, பொது இடங்கள், திரையரங்குகள், மால்-களுக்கு பழையபடி சென்றால் எதுவும் ஆகாது என்ற மனநிலைக்குப் பொதுமக்கள் வர வேண்டாம். முன்பு கூறிய விதிகளை சரியாக கடைபிடியுங்கள். இறப்பு விகிதத்தைக் குறைக்க அதிகமாக வேலை செய்து வருகிறோம். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது" என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.