

அதிகாரிகளை மிரட்டி பாரதி, சுதேசி மில்களை மூட உத்தரவிட்டதாக ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று (செப் 30) கூறியதாவது:
‘‘கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களையும் கண்காணிக்க ஒரு மருத்துவக் குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன். தொழிற்சாலை ஆரம்பிக்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒற்றைச் சாளர முறையில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
ஏஎப்டி, பாரதி, சுதேதி மில் தொழிலாளர்கள் விஆர்எஸ் மூலம் செல்லலாம் என முடிவு செய்து, அதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பினோம். இதனை ஏற்காமல் மில்லை மூட ஆளுநர் உத்தரவிட்டார். அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதனை மத்திய அரசுதான் முடிவு செய்யும். ஆனால் அதிகாரிகளை மிரட்டி 3 மில்களையும் மூடச் செய்திருக்கிறார். பட்டானூர் நிலத்தை விற்று அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு, ஏஎப்டி தொழிலாளர்களுக்கு நிதி கொடுப்பது என முடிஉ செய்தோம்.
ஜிப்மர் நிர்வாகமும் நிலத்தை வாங்குவதாக ஒப்புக் கொண்டது. எவ்வளவு தொகை, எவ்வளவு நாட்களில் நிலத்தை வாங்குவார்கள் எனத் தெரியவில்லை. இதற்குக் காலதாமதம் ஏற்படலாம். எனவே வங்கி மூலம் கடன் பெற்று தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுதேசி, பாரதி மில்களில் 200 தொழிலாளர்களுக்கு ரூ.14.44 கோடியில் 2 மாத சம்பளத்திற்கு ரூ.1.44 கோடி கொடுப்பதற்காக ஆளுநருக்குக் கோப்பை அனுப்பினோம். ஆனால், இந்த இரண்டு மில்களையும் மூட ஆளுநர் உத்தரவிட்டது, எங்களுடைய கவனத்துக்கு வரவில்லை. பாரதி, சுதேசி மில் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
புதுச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் மக்களுக்கு நன்மை செய்வதற்காகச் செயல்பட வேண்டுமே ஒழிய, நிறுவனங்களை மூடு விழா செய்வதற்கு ஆளுநர் தேவையா? காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இதுபோன்ற மூடுவிழாக்களைச் செய்து வருகிறார்.
அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் வேலையை ஆளுநர் பார்த்து வருகிறார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் மிக விரைவில் வரும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், திருத்தி அமைக்கப்பட்ட கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
இதனை அவர்கள் அரசுக்குக் கட்ட வேண்டும். அதனடிப்படையில் 95 சதவீத ஊதியம் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.28 கோடி மானியமாக கொடுக்கிறோம். இது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. கல்விக் கட்டணத்தை வசூலித்து பள்ளிகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடாது என ஆளுநர் உத்தரவு போடுகிறார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்பது வேறு. மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது என்பது வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிகப்படியான பள்ளிகள் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. அதில் படிப்பவர்கள் ஏழை மாணவர்கள், அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மிகவும் சிரமம். ஆளுநர் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையைப் பார்க்கக் கூடாது.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சட்டப் பேரவையில் அதை நிறைவேற்றிய நிலையில் அதனைத் தடுப்பதற்குக் கிரண்பேடி யார்? அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. சட்டப்பேரவை முடிவு செய்து, ஒதுக்கிய நிதியைத் தடுத்து நிறுத்த என்ன அதிகாரம் இருக்கிறது. இதனை அவர் உணர்ந்து நடக்க வேண்டும். மாநிலத்தில் அமைதியான நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அரசோடு அவர் ஒத்துழைப்பு தர வேண்டும்’’.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.