

தமிழகத்தில் பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய 8-ம் கட்ட ஊரடங்கு நாளை (செப். 30) முடிவடைய உள்ளது. பொது போக்குவரத்து தொடக்கம், தொழில்கள் மீண்டும் தொடக்கம், வணிக வளாகங்கள் திறப்பு உள்ளிட்ட அதிகபட்ச தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இந்த பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று (செப். 29) ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு, குணமடைவோர் மற்றும் இறப்பு விகிதம், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.