சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமனம்: முதல்முறையாக தமிழருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்

ஹரிஹரா அருண் சோமசங்கர்
ஹரிஹரா அருண் சோமசங்கர்
Updated on
1 min read

சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான ஹரிஹரா அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஹேக்கில் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் சர்வதேச சட்ட விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று செயல்படுகிறது. சர்வதேச சட்டம் படித்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு இயங்கும் இந்த ஐவர் குழுவின் ஆலோசனைப்படிதான் சர்வதேச சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆலோசனைக் குழுவில் முதல் முறையாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஐவரில் மிகவும் இளையவரான ஹரிஹரா அருண் சோமசங்கர், தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர். சர்வதேச சட்டம் படித்தவர்.

சர்வதேச வழக்கறிஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது வாதத் திறமையால் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்டமைக்காக நீதியரசர்களால் பாராட்டப்பட்ட இவர், சாகித்ய அகாடமி விருதுபெற்ற மீ.ப.சோமசுந்தரத்தின் மகள் வழி பேரன் ஆவார். இவர் சர்வதேச நீதிமன்ற ஆலோசகர் பொறுப்பில் இன்னும் 2 ஆண்டுகள் இருப்பார்.

சர்வதேச நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து இந்து தமிழ் திசையிடம் பேசிய ஹரிஹரா அருண் சோமசங்கர், “பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். ஆனால் எனக்கு மிகவும் இளம் வயதிலேயே இந்த வாய்ப்புத் தேடி வந்திருக்கிறது. ஒட்டுமொத்த ஆசியாவுக்கே நான் ஒருவன் தான் இந்த முறை இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கிறேன். தாத்தா வழியில் தமிழின் பெருமையை சர்வதேச அளவில் தூக்கிப்பிடிக்க கிடைத்த வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in