

கரோனா தொற்று, ஊரடங்கு நிறைவு பெறுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். இதில், சுகாதாரத் துறைச் செயலாளர், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலானது. ஒவ்வொரு முறையும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இடையில் ஜூலை மாதத்துக்குப் பின் தளர்வுகள் அதிகம் அமல்படுத்தப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில் ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.
நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில், ஷாப்பிங் மால்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கோயம்பேடு காய்கறி, மளிகை மொத்த விற்பனை அங்காடியும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வுகள் காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்காமல் இருக்க அரசுத் தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு முறை ஊரடங்கின்போதும் அது முடிவுக்கு வரும் முன் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். பின்னர் மருத்துவ நிபுணர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம். இன்று காலை தலைமைச் செயலாளர் சண்முகம் கரோனா தொற்று அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் அவர் கரோனா தொற்றின் நிலை, தளர்வில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமா? தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்பட வேண்டுமா? மருத்துவ சிகிச்சைகள், மருந்துப் பொருட்கள் கையிருப்பு, மாவட்ட நிலைமை, வடகிழக்குப் பருவமழை வர உள்ள நிலையில் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தலைமைச் செயலாளருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி, டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.