

தலைமைச் செயலகத்தில் தற்கொலைக்கு முயன்ற 2 பேரை போலீஸார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பொதுப்பணித் துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு அதிகாரியாக பணிபுரிபவர் சிவக்குமார். நேற்று காலை அலுவலகத்துக்கு வந்த சிவக்குமார், கழிப்பறைக்கு சென்றார். அங்கு பாட்டிலில் இருந்த பினாயிலை குடித்துவிட்டு, பாட்டிலை உடைத்து கையை கிழித்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீக்குளிக்க முயற்சி
சென்னை ஈஞ்சம்பாக்கம் அதிமுக இளைஞர் அணி செயலாளர் சிவசங்கரன். மனைவி, 2 குழந்தைகளுடன் இவர் நேற்று காலை தலைமைச் செயலகம் வந்தார்.
திடீரென தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே சென்ற அவர் ராஜாஜி சாலை நடுவே நின்றார். தயாராக கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரை தடுத்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸாரிடம் சிவசங்கரன் கூறும்போது, ‘‘நில அபகரிப்பு வழக்கில் ஈஞ்சம்பாக்கம் போலீஸார் என்னை கைது செய்தனர்.
அதில் இருந்து விடுதலை யாகி வந்த பிறகும் போலீஸார் தொடர்ந்து பிரச்சினை கொடுக்கின்றனர்.
காரணமே இல்லாமல் என்னைப் பிடித்து அடிக்கடி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்கின்றனர். அதனாலேயே இவ்வாறு செய்தேன்’’ என்றார். தற்கொலை முயற்சி வழக்கில் அவரை கோட்டை போலீஸார் கைது செய்தனர்.