Published : 24 Sep 2020 08:03 PM
Last Updated : 24 Sep 2020 08:03 PM

அமைச்சர் கனவுடன் காய்நகர்த்தும் கண்ணப்பன்: திருவாடானை அல்லது ராமநாதபுரத்தில் களமிறங்கத் திட்டம்

கடந்த பிப்ரவரியில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், வரும் தேர்தலில் திருவாடானை அல்லது ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காய்நகர்த்தி வருவதாகச் செய்திகள் கசிகின்றன.

ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் (1991-1996) பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். அப்படிப்பட்டவர் அடுத்து வந்த 1996 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இராம.சிவராமனிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு கட்சியிலும் செல்வாக்கை இழந்த அவர் மீது திமுக ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, 2000-ல் அதிமுகவை விட்டு விலகி, மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கண்ட மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சர் தமிழ்குடிமகனின் இளையான்குடி தொகுதி ராஜ கண்ணப்பனுக்குப் போனது. இதை ஏற்கமுடியாமல் தமிழ்குடிமகன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதேநேரம், அந்தத் தேர்தலில் கண்ணப்பன் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. கண்ணப்பனும் இளையான்குடியில் தோற்றார்.

இதைத் தொடர்ந்து தனது கட்சியைக் கலைத்துவிட்டுத் திமுகவில் இணைந்த கண்ணப்பன் 2006 தேர்தலில் அதே இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவரது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவரும் சிவகங்கை மாவட்டத் திமுக செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் கண்ணப்பனின் கனவு பலிக்காமல் போனது.

அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்தவர் மீண்டும் மக்கள் தமிழ் தேசத்தைக் கட்டி எழுப்பப் போவதாகச் செய்திகளைப் பரப்பினார். ஆனால், எதிர்பாராத விதமாக மீண்டும் அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவும் அவரை மன்னித்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து நிறுத்தினார். அந்தத் தேர்தலில் சிதம்பரத்துக்குக் கடும் போட்டியாளராகக் களத்தில் நின்றார் கண்ணப்பன். அதனால், ஒரு காலத்தில் மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற சிதம்பரம், அந்தத் தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தட்டுத் தடுமாறி வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கண்ணப்பனை 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் அப்போதைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக ஆளும்கட்சியாக வந்தாலும் கண்ணப்பனால் கரையேற முடியவில்லை. இப்படித் தொடர் தோல்விகளை அடுத்து அதிமுகவில் கண்ணப்பனுக்கான முக்கியத்துவம் குறைந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தனது முன்னாள் அமைச்சரவைச் சகாவான ஓபிஎஸ் அணியில் ஒதுங்கினார் கண்ணப்பன். ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணையும் சூழல் வந்ததும் தீபா அணி நிழலில் சற்றே இளைப்பாறினார். அதுவும் தேறவில்லை என்றதும் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக பக்கமே வண்டியைத் திருப்பினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குச் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தார் கண்ணப்பன். ஆனால், இரண்டு தொகுதிகளையும் பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டது அதிமுக. இதையறிந்த கண்ணப்பன், அதிமுக தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அத்துடன் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தனது ஆதரவையும் தெரிவித்தார். தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் செய்தார். “எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தத் தகுதியான ஒரே தலைவர் ஸ்டாலின்தான்” என முழங்கினார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 23-ல் மதுரை ஒத்தக்கடையில் பிரம்மாண்டக் கூட்டம் கூட்டி ஸ்டாலின் தலைமையில் தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதிமுகவில் இருக்கும்போதே இனி சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட வேண்டாம் அதற்குப் பதிலாக, யாதவர் வாக்கு வங்கி கணிசமாக இருக்கும் மதுரை கிழக்குத் தொகுதிக்கு மாறிவிடலாம் என கணக்குப் போட்டவர் கண்ணப்பன். அதற்காக மதுரை அய்யர் பங்களா பகுதியில் புதிதாக பங்களாவும் கட்டினார். ஆனால், இப்போது திமுகவில் இருப்பதால் கிழக்குத் தொகுதியைக் கேட்க முடியாது. காரணம், திமுக மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏவாக இருக்கும் தொகுதி அது.

இதுபற்றி அண்மையில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய கண்ணப்பன், “மூர்த்தி மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவருக்குப் போட்டியாக கிழக்குத் தொகுதியை நமக்குக் கேட்பது சரியாக இருக்காது. ஒருவேளை, திமுக தலைமையே எனக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் மூர்த்தியைப் பகைத்துக் கொண்டு நம்மால் அங்கே ஜெயிக்க முடியாது” என்று சொன்னாராம்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கண்ணப்பனின் ஆதரவாளர்கள், “இந்த முறை திமுக ஆளும்கட்சியாக வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இம்முறை எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என அண்ணன் நினைக்கிறார். சிவகங்கை அல்லது மதுரை மாவட்டத்தில் நின்று வெற்றி பெற்றால் அங்கே ஏற்கெனவே உள்ள சீனியர்களுக்குத்தான் அமைச்சராகும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால், ராமநாதபுரத்தில் இதுவரை கோலோச்சி வந்த சீனியரான சுப.தங்கவேலன் குடும்பத்தைத் திமுக தலைமை ஓரங்கட்டி வைத்துவிட்டது. அவருக்குப் பதிலாக மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கம் கட்சிக்கு ஜூனியர். எனவே அந்த மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றால் எப்படியும் மாவட்டப் பிரதிநிதித்துவத்தில் அமைச்சராகிவிடலாம் என அண்ணன் நினைக்கிறார்.

அதற்கான முதல் தெரிவாக திருவாடானை தொகுதியை வைத்திருக்கிறார். இதனிடையே, தற்போது காரைக்குடி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் (காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்) கே.ஆர்.ராமசாமி, வரும் தேர்தலில் தனது பழைய தொகுதியான திருவாடானைக்கே போய்விடலாமா என ஆலோசனை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. அப்படி ஒருவேளை அவர் திருவாடானைக்கு வந்தால் அண்ணன் (கண்ணப்பன்) ராமநாதபுரம் தொகுதியைக் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்” என்று சொன்னார்கள்.

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் பதவியைக் குறிவைத்துக் கண்ணப்பன் காய் நகர்த்துவது சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் திமுக முன்னோடிகள் மத்தியில் இப்போதே லேசான கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை, கண்ணப்பன் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றால் தங்களுக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என பயப்படும் அவர்கள், “கண்ணப்பனை சென்னை பக்கமே ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்துங்கள்” எனத் தங்களுக்கு நெருக்கமான தலைமைக் கழக நிர்வாகிகளின் காதுகளில் இப்போதே ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x