நான் 3 நாள் மவுன விரதம்; பேட்டியைத் தவிர்த்த சுற்றுலாத் துறை அமைச்சர்

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்: கோப்புப்படம்
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்: கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சியில் அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், 3 நாள் மவுன விரதத்தில் இருப்பதாக புன்சிரிப்புடன் கூறி செய்தியாளர்களிடம் பேசுவதைத் தவிர்த்துச் சென்றார்.

அதிமுகவில் கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இடையே பனிப்போர் நிலவி வருவது அண்மைக்காலமாக வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, அதிமுக அமைச்சர்கள் சிலர் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்துகளும் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்தது.

இந்தச் சூழலில், அதிமுக செயற்குழுக் கூட்டம் செப்.28-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்குள்ளாக வேறு ஏதேனும் புதிய சர்ச்சையோ, விவாதமோ எழுந்துவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கருத்துக் கூறுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சியில் இன்று (செப். 24) நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் கலந்துகொண்ட மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் நயமாகப் பேட்டியைத் தவிர்த்துவிட்டார்.

பேட்டிக்காக செய்தியாளர்கள் அவரை அணுகியபோது "சொல்ல ஒன்றுமில்லை" என்ற அமைச்சர், செய்தியாளர்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டபோது, "நான் 3 நாள் மவுன விரதம்" என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு காரில் ஏறி, புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, "கட்சி, ஆட்சி, சசிகலா வருகை, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் நிச்சயம் கேள்வி எழுப்புவார்கள். தனிப்பட்ட கருத்து கூறக் கூடாது என்று ஏற்கெனவே கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இன்னும் 3 நாட்களில் அதிமுக செயற்குழுக் கூட்டம் கூடவுள்ள நிலையில், புதிய சர்ச்சையோ, விவாதமோ ஏற்பட தங்கள் கருத்து காரணமாகிவிடக் கூடாது என்பதாலேயே அமைச்சர் பேட்டி அளிக்க மறுத்திருக்கலாம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in