

ஈரோடு மாவட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத ஊழியர்களால், பொது மக்கள் பொருட்களை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 1132 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. இதன்படி, மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் தோறும் பயோ மெட்ரிக் கருவிகள் வைக்கப்பட்டு, பொருட்கள் வாங்க வருபவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதன்பின்னர் பொருட்கள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.
ரேஷன் பொருட்களை வாங்க நேற்று காலை கடைக்கு வந்தவர்களின் கைரேகைகளை பதிவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் கைரேகை பதிவு ஆகாததால், மீண்டும், மீண்டும் முயற்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தடைபட்டது.
ஊழியர்களுடன் வாக்குவாதம்
ஈரோடு மரப்பாலம் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று மண்ணெண்ணெய் வாங்க வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கைரேகைகள் பயோமெட்ரிக் கருவியில் பதிவாகவில்லை. இந்நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு, ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்தனர். மேலும், புதிய பயோமெட்ரிக் இயந்திரங்களைக் கொண்டு வந்து தடையின்றி பொருட்களை வழங்க அறிவுறுத்தினர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
முறைகேடு தடுக்கப்படும்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை கொண்டு வருவதன் மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும். எங்களது பொருட்கள் எங்களுக்கே கிடைக்கும். இதனால், இந்த முறையை வரவேற்கிறோம். ஆனால், பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதில், வழங்கல்துறை அதிகாரிகளோ, ரேஷன் அலுவலர்களோ அக்கறை காட்டவில்லை. உரிய பயிற்சி பெறவில்லை. பயோமெட்ரிக் முறைக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு இருப்பது போல் காட்ட வேண்டும் என்பதற்காகவே, இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
மேலும், பயோ மெட்ரிக் இயங்கவில்லை எனில், ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டில் பதிந்த தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, அதன் மூலம் பொருட்களை வழங்கலாம். ஆனால், அது போன்ற முயற்சியில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபடுவதில்லை. மாவட்ட ஆட்சியர் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதை கண்கணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.இலாஜிஜானிடம் கேட்டபோது, ‘பயோமெட்ரிக் இயந்திரம் இயக்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பயோமெட்ரிக் கருவிகள் இயங்கவில்லை என்ற புகார் வந்ததால், அதற்குரிய பொறியாளர்கள் பழுதுபார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’ என்றார். ‘செல்போன் எஸ்.எம்.எஸ். முறையில் பொருட்கள் வழங்கி இருக்கலாமே’ எனக் கேட்டபோது, ‘இனிமேல் அந்த முறை பின்பற்றப்படும்’ என்றார்.