

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குரூப் ஏ மற்றும் பி (group A & B) அரசாங்க அதிகாரிகளில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது, 2,506 பேர் 2019-ம் ஆண்டுக்கான தங்கள் அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை தெரிவிக்கவில்லை. இனி ஆண்டுதோறும் ஜனவரியில் அனைத்து அதிகாரிகளும் ஆன்லைனில் தகவலை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் ஆண்டுதோறும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்வது அவசியம். முக்கியமாக, பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளுக்கு ஆண்டுதோறும் அதிகாரிகளால் சொத்துக்களை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை முக்கியமாக ஊழலைத் தடுப்பதும், அரசு ஊழியர்களின் சொத்துக்களைக் கண்காணிப்பதும், அவர்களின் சொத்துக்களை அவர்கள் அறிந்த வருமான ஆதாரத்திற்கு ஏற்றவாறு அடையாளம் காண்பதற்கு உதவும்.
புதுச்சேரியில் குரூப் ஏ, பி அதிகாரிகள் அசையும், அசையாத சொத்துக்களை எவ்வளவு பேர் தாக்கல் செய்துள்ளனர் என்று தகவல் அரியும் உரிமைச்சட்டத்தில் சவுரவ் தாஸ் என்பவர் தகவல்கள் கோரியிருந்தார். ஆனால், அரசு தரப்பில் தகவல் மறுக்கப்படவே, அதை மேல்முறையீடு செய்தார். அதையடுத்து, மேல்முறையீடு ஆணையம் தகவல் தர அறிவுறுத்தியது. அத்துடன் அதிகாரிகளின் சொத்து அறிவிப்புகளை டிஜிட்டல் மயமாக்கவும் மேல்முறையீட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பொதுத் தகவல் அதிகாரியும், சார்பு செயலாளருமான கண்ணன் அளித்த பதிலில், "புதுச்சேரியில் மொத்தம் 10 ஆயிரத்து 949 குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளில், 2019 ஆம் ஆண்டில் 2,506 அதிகாரிகள் தங்கள் அசையும், அசையாத சொத்துக்களின் விவரங்களை அறிவிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சவுரவ் தாஸ் கூறுகையில், "புதுச்சேரியிலுள்ள குரூப் ஏ, பி அதிகாரிகளில் நான்கில் ஒருவர் சொத்து விவரங்களை தரவில்லை. சொத்து விவரங்கள் தராதவர் பட்டியலில் பல அதிகாரிகள், அமைச்சர்களின் தனி செயலாளர்கள், பல்வேறு துறை இயக்குநர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், கல்லூரி, பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் எஸ்.பி.க்கள், ஆய்வாளர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
தற்போது தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் புதிய அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். அதன்படி, அனைத்து அதிகாரிகளும் ஜனவரியில் தங்கள் சொத்து விவரங்களை ஆன்லைனில் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார். தலைமை விஜிலென்ஸ் அலுவலகம் இதை கண்காணிக்கவும், சரியான நேரத்தில் தங்கள் சொத்து விவரங்களை அதிகாரிகள் தெரிவிப்பதை உறுதி செய்யவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.