நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் கொதித்தெழ வேண்டும்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் கொதித்தெழ வேண்டும் என்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செப். 19) புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் அதிக மருத்துவ பரிசோதனை செய்வதன் காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், ஜிப்மருக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக 21-ம் தேதி ஜிப்மர் நிர்வாகத்துடன் பேச உள்ளோம். தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் தங்களிடம் காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்குடன் வருபவர்கள் குறித்த விவரங்களை உடனே சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் தகவல் தெரிவித்தால், அதனடிப்படையில் அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை செய்ய முடியும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொற்றின் தாக்கம் தெரியாமல் வெளியே உலவுகின்றனர். இதனால் தொற்று சமூக பரவலாக மாறி மற்றவர்களும் பாதிப்பு ஏற்படும். எனவே, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவத்துறையில் ஏற்படுகிற மாற்றங்களின் அடிப்படையில் மருத்துவமனை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்குக் கரோனா தொற்று சம்பந்தமாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கிராமப்புறங்களில் உள்ள மக்களை எக்ஸ்-ரே கருவி மற்றும் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்துவதா? என்று முடிவு செய்ய வேண்டும்.

இதற்காக 15 துணை சுகாதார மையங்களில் எக்ஸ்-ரே கருவி மற்றும் ஆக்ஸி மீட்டர் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செய்ய வேண்டும். அதன்மூலம் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வெளியே உலவுவதை தடுக்க முடியும். புதுச்சேரியில் உள்ள 2,463 சாதாரண படுகைகளில் 975 காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 958 ஆக்சிஜன் படுக்கைகளில் 398 படுக்கைகள் காலியாக உள்ளன. 132 வென்டிலேட்டர்களில் 43 காலியாக உள்ளன. 5,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.

தனியார் மருத்துவமனைகளிடம் 200 சாதாரண படுக்கைகள், 100 ஆக்சிஜன் படுக்கைகளும் கேட்டோம். அதில் 90 சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்துப் படுக்கைகளையும் ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல், ஜிப்மரிலும் கூடுதலாக ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.

துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியால் ஓரளவு கரோனா தொற்று கட்டுப்படுத்த முடிகிறது. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர் சவுமியா சுவாமிநாதனை அழைத்து ஆலோசனைகளை கேட்க உள்ளோம்.

தற்போது செலவு அதிகமாக உள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதியை செலவு செய்து வருகிறோம். கரோனா தொற்று பரவல் டிசம்பர் வரை இருக்கும் என்கின்றனர். இதனால் இன்னும் நிதி தேவைப்படுகிறது. தொழிற்சாலை அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு தாராளமான நிதி வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. விவசாயிகளை பாதிக்கும் வகையிலான 3 மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளத்தை சேர்ந்த உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதனை விவசாயிகள் முழுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மத்திய அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் அவர்களது இஷ்டப்படி சட்டத்தை நிறைவேற்றினால், அதனால் விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு மாநிலங்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று கருதுகிறேன்.

புதுச்சேரியில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தற்போது நீட் தேர்வை நடத்தி இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகின்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். இத்தேர்வு வந்தபிறகு தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மத்திய பாஜக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகம், புதுச்சேரியில் மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக மக்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுமட்டும் போதாது, மக்கள் கொதித்தெழ வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். தங்களது உயிரை மாய்த்து கொள்ளக் கூடாது. புதுச்சேரியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in